பருத்தித்துறை–மருதங்கேணி வீதியில் தொடரும் மண் மாஃபியாவின் அட்டகாசம்
பருத்தித்துறை–மருதங்கேணி பிரதான வீதியில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மண் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்தோடு, இரவு நேரங்களில் வீதியோரங்களில் மண் கொள்வனவு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் எவ்வித அச்சமுமின்றி இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, பருத்தித்துறை–மருதங்கேணி வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மண் அகழப்பட்டு, வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், இதனால் வீதியோரங்களில் மண் சிதறிக் காணப்படுவதுடன், மண் அகழ்வுக்கான தடயங்களும் ஆங்காங்கே தென்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அச்சநிலை
அத்துடன், இரவு நேரங்களில் குறித்த வீதியால் பயணிக்கும் பயணிகளை வழிமறித்து அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெறுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக மருதங்கேணி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை
மேலும், சில மண் மாஃபியா கும்பல்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முறைப்பாடு செய்தவர்களின் தகவல்கள் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கசியவிடப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதால், முறைப்பாடு செய்வதற்கே மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், பருத்தித்துறை–மருதங்கேணி பிரதான வீதியில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மண் அகழ்வு, மண் கடத்தல் மற்றும் பயணிகள் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வும், இரவு நேர அச்சுறுத்தல்களும் தொடர்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.