ராஜ் சோமதேவவின் அறிக்கை.. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் யாழ். நீதிமன்றம் அதிரடிக் கட்டளை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த முன்னைய அறிக்கைகளுக்கும், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கும் இடையில் ஏன் வேறுபாடுகள் உள்ளன என்பதற்கான நியாயமான காரணங்களை மன்றினால் கண்டறிய முடியவில்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தங்கி நின்று எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கத் தேவையில்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே என்றும் கட்டளையிட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கை மற்றும் புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
நீதிமன்றத்தின் தீர்மானம்
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் மற்றும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா, யூட் தினேஷ், கு. குருபரன், வி.மணிவண்ணன், க. சுகாஷ் உள்ளிட்ட இருபது வரையான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் சட்டத்தரணிகளான மீராக் ரஹீம், பூரணி மரியநாயகம் உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.
மேலும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸ் அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் பின்னர் நீதிவானால் பின்வரும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
01. பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள முதலாம், இரண்டாம், மூன்றாம் அறிக்கைகளுக்கும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றமை சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
02. முதல் மூன்று அறிக்கைகளுக்கும் இடைக்கால அறிக்கைக்கும் இடையில் ஏன் வேறுபாடுகள் உள்ளன என்ற நியாயமான காரணங்களை மன்றினால் கண்டறிய முடியவில்லை. பேராசிரியரின் அறிக்கையில் தங்கி நின்று எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கத் தேவையில்லை; அது அவருடைய கருத்து.
மீட்கப்பட்ட நாணயங்கள்
03. என்புக்கூடுகள் எவ்வாறு அங்கு வந்தன, அவை யாருடையவை என்பது சட்ட ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தரணிகள் கூறியவாறு கார்பன் பரிசோதனை தவிர்ந்த வேறு பரிசோதனைகள் செய்வது தொடர்பில் பரிந்துரை செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது.

04. கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் இன்று எந்தக் கட்டளையையும் ஆக்காது விடுகின்றது. மேலதிக விஞ்ஞான ரீதியான விடயங்களை ஆராய்வதற்காக மற்றொரு கலந்துரையாடலுக்குத் தீர்மானிக்கப்படுகின்றது.
05. இது குறித்த அடுத்த கலந்துரையாடல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி மாலை 2 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் "செம்மணி மனிதப் புதைகுழியில் பெருந்தொற்றால் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கச் சாத்தியம் உள்ளதாகத் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை வழங்கியுள்ளார். இந்தக் கருத்தையும் அறிக்கையையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 1919ஆம் ஆண்டிலேயே பெருந்தொற்றொன்று (அம்மை நோய்) ஏற்பட்டது. ஆனால், 1920ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட கால நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டன.
எனவே, இதிலுள்ள வெளிப்படையான முரண்தன்மையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியையும் பிற விடயங்களையும் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கையின் மூலம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை.
சத்தியக்கடதாசிகள்
அத்துடன், கார்பன் பரிசோதனை மூலம் காலத்தை நிர்ணயம் செய்யும் முறையையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். அது விஞ்ஞானபூர்வமானதல்ல என்ற கருத்தியல் பல மட்டங்களில் இப்போது வெளிப்படுத்தப்படுகின்றது.
மன்னார், மாத்தளை உள்ளிட்ட ஒருசில புதைகுழிகள் தொடர்பில் வழங்கப்பட்ட கார்பன் அறிக்கைகள் விசாரணைகள் நீர்த்துப்போகக் காரணமாக அமைந்தன. எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது.

மரபணுப் பரிசோதனை மூலமே காலப்பகுதி மற்றும் அடையாளம் கண்டறியப்பட வேண்டும். அதுவே விஞ்ஞான ரீதியில் நூறு வீதம் சரியான முறைமையாகும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைக்காகத் தங்களின் மரபணு மாதிரிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ள இருவரின் சத்தியக்கடதாசிகளை இங்கு தாக்கல் செய்துள்ளோம். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில் தம்மை நெருக்கமான தரப்பாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது மரபணுக்கள் இந்த விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தவும், உண்மைகளைக் கண்டறியவும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காலத்தை அறியவும் உதவும் என்றும் அந்தச் சத்தியக்கடதாசியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சத்தியக்கடதாசியைத் தாக்கல் செய்தவர்களுக்குப் படைத் தரப்பால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், அவர்கள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பேண வேண்டும்.
இப்போதைய கட்டத்தில் பகிரங்கப்படுத்தக் கூடாது. இந்த இருவரைத் தொடர்ந்து மேலும் பலர் இவ்வாறு தங்கள் மரபணு மாதிரிகளைத் தர முன்வருவார்கள்" எனக் குறிப்பிட்டார்.
தனிநபர்களினால் வங்கி கணக்குகளில் குவிக்கப்படும் பணம்! அஸ்வெசும திட்டத்தில் கட்டாயப்படுத்தப்படும் நடைமுறை
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri