நோயாளிகளிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்த மென்பொருள் பொறியாளர்
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளிடமிருந்து 10 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த 25 வயது நிரம்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் பொலிஸில் பதிவு செய்யப்பட்ட ஏழு முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு வங்கியில் பணம் வைப்பு செய்வதாக உறுதி
குறித்த இளைஞன் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் சுகயீனம் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டதுடன், அவர்களின் சிகிச்சைக்கான 100,000 ரூபா வங்கியில் வைப்பு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
சந்தேகநபர் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான எஸ்எம்எஸ் ஓடிபியைப் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு நோயாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
10 மில்லியன் ரூபா வரையில் மோசடி
சிங்கப்பூரில் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சந்தேகநபர் 10 மில்லியன் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு, வேலவீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏறாவூரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான நிதி மோசடிக்கு உள்ளான புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.