சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 125 வரியில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு..!
சீன(China) இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 125வீத வரிகள் உட்பட, பரஸ்பர கட்டணங்களிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், விலக்கு அளித்துள்ளது.
குறித்த பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.
பரஸ்பர கட்டணங்கள்
இதன்படி குறைக்கடத்திகள் சூரிய மின்கலங்கள் மற்றும் மெமரி அட்டைகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் இந்த விலக்குகளில் அடங்குகின்றன.
இந்தநிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பரஸ்பர கட்டணங்களின் ஒரு பகுதியாக இல்லாத 20 வீத வரியால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகள் இன்னும் பாதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில் வரி விதிப்புக் கட்டணங்களின் பாதிப்பு நுகர்வோருக்கு சென்றிருக்குமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஐபோன்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளது, அதே நேரத்தில் கடந்த ஆண்டு எப்பிள் அதன் ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதிக்கும் மேலானது அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக கவுண்டர்பொயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
சீனாவின் தயாரிப்பு
அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எப்பிளின் ஐபோன்களில் 80வீதமானவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 20வீதமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
இதேவேளை சம்சங் போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து, எப்பிள் நிறுவனம், சீனாவை அதிகமாக நம்பியிருப்பதைத் தவிர்க்க அதன் விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த முயற்சித்து வருகிறது.
இதன் கூடுதல் உற்பத்தி மையங்கள் இந்தியாவிலும்; வியட்நாமிலும் உள்ளன.