வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் விடுத்துள்ள கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு தொடர்ச்சியான ஊக்குவிக்கும், கண்காணிப்பும் இருக்க வேண்டும் என மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, இதன் ஊடாக தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக விவசாய பீட மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
"முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் மாவட்ட செயலராக நான் பணியாற்றிய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை தொடர்ச்சியாக நடைபெறவில்லை.
போருக்கு முன்னர் எமது வடக்கு மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இருந்தன. போர் மற்றும் அதன் பின்னரான இடப்பெயர்வுகளால் அவை அழிவடைந்துள்ளன. போரின் பின்னர் வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு மிக முக்கிய பிரச்சினையாக தோற்றம் பெற்றிருக்கின்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரைப் பலப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைக்கு ஓரளவு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
இத்தகைய தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களான நிதி மூலத்தை அடையாளம் காணுதல், அவர்களின் தொழில் முயற்சிகளை அடுத்த தளத்தை நோக்கி விரிவாக்குவதற்குரிய ஆலோசனைகள் என்பன இருக்கின்றன. அவற்றை இப்படியான கருத்தரங்குகள் மூலம் வழங்குவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் எடுக்கின்ற முயற்சி வரவேற்கதக்கது.
இளம் தொழில் முயற்சியாளர்
இவற்றுக்கு அப்பால் இத்தகைய தொழில்முனைவோர் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றன.
கண்காட்சிகள் நடத்தப்படும்போது அங்கு கொண்டு வந்து தமது பொருட்களை சந்தைப்படுத்தும் நிலைமையே இருக்கின்றது. அவர்களுக்கு தொடர்ச்சியான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க மாகாணசபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி வரத் தொடங்கியுள்ளார்கள். இது சாதகமான மாற்றம். இதைப் பயன்படுத்தி தேசிய உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
அதேநேரம், எமது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் தொடர் ஊக்குவிப்புக்களை வழங்கி அவர்களையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும். இதன் ஊடாக புதிதாக இளம் தொழில்முயற்சியாளர்களையும் உருவாக்க முடியும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |