நாமல் - ஏர்பஸ் மின்னஞ்சல் தொடர்பில் பரபரப்பு..! குற்றச்சாட்டுகளை மறுத்த SLPP சட்டத்தரணி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்வவை ஏர்பஸ் (Airbus) நிறுவனத்துடன் தொடர்புபடுத்தும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை SLPP தரப்புச் சட்டத்தரணி மனோஜ் கமகே நிராகரித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமல் பெயர் இடம்பெறவில்லை..
நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையே நேரடி மின்னஞ்சல் தொடர்பு எதுவும் இல்லை என்றும், குறிப்பிடப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் நாமல் ராஜபக்ச பெயர் இடம்பெறவில்லை என்றும் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையிலேயே நடைபெற்றன என்றும், அவை ராஜபக்சவின் ஈடுபாட்டை எந்த வகையிலும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்பஸ் விவகாரத்தில் நாமல் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளையும், இத்துடன் தொடர்புடைய பணம் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற கூற்றுகளையும் கமகே மறுப்பதாக கூறியுள்ளார்.
அரசியல் சூழ்ச்சிகளே இது..
கமகே வழங்கிய தகவல் அடிப்படையில், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு முக்கியமாக தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
சுயாதீனமான மற்றும் உறுதிப்படுத்தும் சான்றுகள் ஏதுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு கூட்டாளியின் வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை குற்றவாளியாகத் தீர்ப்பளிக்க முடியாது.
அரசாங்கத்தின் சில தரப்பினர் இந்த விவகாரத்தை திசைதிருப்பவும், பொதுமக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்கவும் முயற்சிக்கின்றது.
மேலும், நாமலுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், அவரை சிறையிலடைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் SLPPயையோ அல்லது அதன் அரசியல் இயக்கத்தையோ தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என சவால் விடும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.