பேசுபொருளாகி வரும் டொலரின் பெறுமதி.. மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அண்மைக்காலமாக வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் (Foreign exchange market) ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், சந்தையின் அடிப்படை ஸ்திரமின்மையால் ஏற்பட்டவை அல்ல என்றும், மாறாக வதந்திகள் (Speculation) மற்றும் தற்காலிக சந்தை சிதைவுகளால் (Market distortions) ஏற்பட்டவை என்றும் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணம் அச்சிடல் மற்றும் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட இந்த நிலைமையானது வங்கிகளுக்கு இடையிலான சந்தையினால் (Interbank market) அல்லாமல், வர்த்தக வங்கிகளுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான அசாதாரண நடவடிக்கைகளினாலேயே இந்நிலை உருவானது என்று அவர் விளக்கினார்.
நாணய மாற்று விகிதங்கள்
சாதாரண சூழ்நிலையில், வர்த்தக வங்கிகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்யும் 'வங்கிகளுக்கு இடையிலான சந்தை' நாணய மாற்று விகிதங்களே அளவுகோலாகக் கருதப்படும்.

வாடிக்கையாளர்களுக்கான விகிதங்கள் கொள்வனவு மற்றும் விற்பனை விளிம்புகளைப் (Margins) பொறுத்து இதற்குச் சற்று மேலாகவோ அல்லது கீழாகவோ மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், சமீபத்திய நாட்களில் இந்த நடைமுறையில் ஒரு மாற்றம் காணப்பட்டது.
நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, அதிகரித்த வதந்திகள் மற்றும் இறக்குமதி தொடர்பான கவலைகள் காரணமாக வெளிநாட்டு நாணயத்திற்கான அவசரத் தேவை (Panic-driven demand) ஏற்பட்டது.
இதனால் வங்கிகளுக்கு இடையிலான சந்தைக்கு வெளியில் நடந்த பரிவர்த்தனைகள் கணிசமாக உயர்ந்த மட்டத்தில் இடம்பெற்றன.
வங்கிகளுக்கு இடையிலான சந்தை விகிதம் ஒரு அமெரிக்க டொலருக்கு 320 முதல் 330 ரூபாய் வரை இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களுடன் சில வர்த்தக வங்கிகள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் 354 ரூபாய் மற்றும் 346 ரூபாய் போன்ற மிக உயர்ந்த மட்டத்தில் பதிவாகியிருந்தன. இது சந்தையில் ஏற்பட்ட ஒரு தெளிவான சிதைவை பிரதிபலிக்கிறது.

"இது சாதாரண சந்தை நடத்தைக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை" எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இத்தகைய விலகல்கள் காரணமாகவே மத்திய வங்கி தலையிட்டு திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வங்கிப் பொருளாளர்களுடன் (Bank treasurers) கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், சந்தைக்குள் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பணப்புழக்கத்தை (Liquidity) மேம்படுத்தவும் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சந்தை நிலைமைகள் மிக வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை மத்திய வங்கி அவதானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam