இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் ! வடக்கு கிழக்கு தமிழ்த்தேசிய கட்சிகளும்!
எதிர்வரும் யூன் அல்லது யூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடக்கும் என தற்போதய ஜனாதிபதி ரணில் உட்பட பல அமைச்சர்களும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் தெரிவித்துள்ள நிலையில் கொழும்பு தேசிய கட்சிகள் எல்லாம் அதற்கான கருத்துக்களையும் தமது ஆதரவுகளையும் அவர் இவர் என தெரிவிப்பதை காணலாம்.
குறிப்பாக தற்போதய ஜனாதிபதி சிறுபான்மை கட்சிகளை தனக்கு சார்பாக வளைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வழமையான நரித்தந்திர வாக்குறுதிகளை தற்போது வழங்கி வருவதை காணலாம். கடந்த வாரம் 06.03.2024ம் திகதி நாடாளுமன்றத்தில் வடகிழக்கை மையப்படுத்திய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை கூட்டாகவும், தனியாகவும் சந்தித்து மாகாணசபை அதிகாரங்கள் 13, வது திருத்தம் பற்றி பேசியுள்ளார்.
அதில் மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை பற்றி ஜனாதிபதியோ, சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோ வாயை திறந்ததாக தெரியவில்லை. ஜனாதிபதியாக தாம் வருவதற்காக வாக்குறுதிகள் மட்டும் பேசப்பட்ன.
இதேபோல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுவும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களை சந்தித்து காணி விடயம் சம்மந்தமாக பேசியதாக அறிய முடிகிறது.
ரணில் கூட்டணி
தற்போதைய ஜனாதிபதி ரணில் அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெற்கு ஊடகமமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவான ஓர் கூட்டணியின் கீழ் ரணில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நிமால் லன்சா தலைமையிலான சிறு கட்சிகளுடனும் மொட்டு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனும் ரணில் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பிரமித பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இந்த தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாசாவும் கடந்த முறைபோன்று இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான பல கட்சிகளை சேர்த்து தமக்கு ஆதரவான ஒரு கூட்டணியை ஆம்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதேபோலவே மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்காவும் வழமைபோன்று ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி தென்பகுதிகளிலும் தற்போது வடக்கு கிழக்கை சேர்ந்த இடங்களிலும் தம்க்கான ஆதரவை திரட்டும் பணிகளிகளில் மும்மூரமாக இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், பசில் ராஜபக்சவும் அமெரிக்கா சென்று கடந்த 5,ம் திகதி நாடு திரும்பியுள்ளார் மொட்டு கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் பற்றி கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அவர் கூறினார்.
பொது வேட்பாளர்
அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மொட்டுக்கட்சியில் மகிந்த கொம்பனி தம்பி பசிலா அல்லது மகன் நாமலா என்று முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவதையும் தற்போது அறியமுடிகிறது. இவர்களை விட இந்த நான்கு வேட்பாளர்களுக்கு ஆதரவாக சில வர்த்தகர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்பது தெளிவு.
வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் எந்த முடிவை எடுப்பது என்ற தீர்க்கமான முடிவின்றி திண்டாடும் நிலைமை காணமுடிகிறது.
இதற்கான காரணம் தமிழ்தேசிய கட்சிகள் எதுவுமே ஒன்றாய் பேசி ஒருமித்து ஒரு முடிவை எடுக்க முடியாதவர்களாகவே கடந்த 2009, மே,18, ல் இருந்து இன்றுவரை உள்ளனர்.
ஒருவர் கூறும் கருத்தை அல்லது ஒரு கட்சி கூறும் கருத்தை இன்னொரு கட்சி எதிர்பதும் முரண்படுவதுமே இதற்கான காரணமாக உள்ளது.
கடந்த வருடம் 2023, நவம்பர், 05, ம் திகதி மன்னாரில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்தது.
அந்த தீர்மானம் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் தனித்தனியாக கலந்துரையாடுவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் விவகாரம்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குறித்த கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்று தனியான தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக இறக்குவதாக முதல் முதலாக பேசப்பட்டது.
2009 மே மாதம் போர் மௌனிக்கப்பட்டு தற்போது பதின்ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ரெலோ. ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய இயக்கங்களை மையப்படுத்திய புதிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எவ்வாறு எந்தப் புள்ளியில் ஒன்று சேர்ந்து பயணிக்கவுள்ளன என்ற கேள்விகளும் நம்பிக்கையீனங்களும் விஞ்சியுள்ளன.
தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விகள் பல சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டி விடுகின்றன.
கொழும்பை மையமாகக் கொண்ட எந்த ஒரு பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது கடந்த காலங்களில் நாம் கண்ட உணமை.
தமிழ்த் தேசியக் கட்சிகள்
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் இனப் பிரச்சினை என ஒன்று இல்லை என்ற நிலைப்பாடு சிங்கள கட்சிகள் அனைத்திடமும் உண்டு.
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிங்கள ஊடகங்களும் அவ்வாறான கருத்துக்களையே முன்வைத்தும் வருகின்றன. அனைத்துத் தமிழ் மக்களும் குறித்த தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரமும் அதன் தேர்தல் முறையின் மூலமாகவும் வெற்றிபெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொது வேட்பாளருக்குக் கிடைக்குமானால் "தமிழ்த்தேசியம்" என்ற நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் நிறுவ முடியும் என்ற கருத்தும் உண்மையும் இல்லாமல் இல்லை.
பிரதான சிங்கள வேட்பாளர்களில் எவரும் ஜனாதிபதியாவதற்குரிய ஆகக் குறைந்தது ஐம்பத்து ஒரு சதவீத வாக்குகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டால் மட்டும் தமிழ்ப் பொது வேட்பாளரின் வாக்குப் பலத்தினாலோயே இந்த நிலை ஏற்பட்டது என்றும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் காண்பிக்க முடியும்.
பேரம் பேசவும் முடியும் என்ற கருத்துக்களையும் மறுதலிக்க முடியாது. ஆகவே இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தமிழ் ஊடகங்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒருமித்த குரலில் இப்போதிருந்தே செயலாற்ற வேண்டும்.
ஆனால் அவ்வாறு செயலாற்ற தமிழ தேசிய கட்சிகளில் ஒற்றுமை இல்லை என்பதே தமிழர்களுக்கான சாபக்கேடு.
அதைவிட பிரதான தமிழ்தேசிய கட்சிகளின் தாய்க்கட்சி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்குள்ளும் கடந்த ஜனவரி மாதம் 17,வது தேசிய மாநாடு இடம்பெறுவதற்கு முன்னம் ஏற்பட்ட்தலைவர் தெரிவு போட்டியின் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளால் இரண்டு அணி என்ற பேச்சால் தற்போது யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநாடு நடத்தமுடியாமல் நீதி மன்ற தடை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள்
இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதனால் தமிழரசுகட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எந்த முடிவை எடுக்கும் என்பது தெரியவில்லை. கடந்த 1994,ல் ஆண்டு சந்திரிகா,2005,ல் மகிந்தராஷபக்ஷ,2010 ,ல் சரத் பொன்சேகா, 2015 ,ல் மைத்திரிபால சிறிசேன, 2020 ல் ரணில் சஜித் கூட்டு என தொடர்ச்சியாக தமிழ் தலைவர்கள் அவர்களை நம்பி தமிழ்மக்களுக்கு கூறும் கருத்தைக்கேட்டு சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்துத் தமிழர்கள் எதுவும் கண்டதேயில்லை.
கடந்த 74 வருட அரசியல் போராட்டத்தில் தமிழர்களுக்கு அழிவுகளும் ஏமாற்றங்களும் விஞ்சியுள்ள பின்னணியில் அவற்றைப் படிப்பினையாக எடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் சிங்களக் கட்சிகள் மீதான நம்பிகையீனங்களையும் உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய காலமாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகவும் தற்போது உள்ளது.
பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கும் பிரதான சிங்களக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மாறாக ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதாலோ அல்லது யாரேனும் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதாரிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை.
தமிழ் மக்கள் தங்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் அவருக்குரிய வாக்குகள் நேரடியாகவே எண்ணப்படும்.ஆனால் தற்போது பிரதான சிங்கள வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களை கவரும் படியான தமது பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்க ஆரம்பித்துள்ளர்.
அவர்களுக்கு ஆதரவாக சில தமிழர்களும் பணத்துக்காக வழமை போன்று சோரம்போய் தமிழர்களை ஏமாற்றும் கைங்கரியங்களை செய்து வருவதையும் காண முடிகிறது.
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் அக்கறை காட்டத்தேவையில்லை என்ற நிலைப்பாடுடனே இந்த தடவையும் உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதியாக எக்காரணம் கொண்டும் தமிழர் ஒருவர் வரப்போவதில்லை இருந்தும் தமிழ்பேசும் மகலகளின் வாக்கோகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இறுதியாக நடந்த 2019, ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய தேர்தல்களில் இருந்தாலும் இறுதியாக நடந்த 2019, ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ரா[பக்r வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் ஆதரவு இன்றி வெற்றிபெற்றார் என்பது உண்மை.
இந்த வருடம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வழமையாக இருமுனைப்போட்டியாக இருந்த தேர்தல் மும்முனைப்போட்டியாக இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னம் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் அவருக்கு இருந்தது காரணம் அவருடைய செல்வாக்கு வீழ்ச்சி நிலையில் உள்ளதை கருதி முதலில் நாடாளுமன்ற தேர்தலை் நடத்தி அதன் ஊடாக வெற்றிபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து தமது ஆதரவை கூட்டலாம் என எதிர்பார்த்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ரணில் கலைப்பதாக விட்ட எச்சரிக்கை சமிக்ஞையை உணர்ந்த பல ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர் என்பதை காணலாம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எந்த சிங்கள வேட்பாளர்களையும் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதை அவர்களுடைய கருத்துகளில் இருந்து அறியமுடிகிறது.
அதிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை அரசாங்கம் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற மன ஆதங்கம் மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் ஆழமாக பதித்துள்ளது.
தமிழ் தேசிய கட்சிகள் ஏற்கனவே கூறிய தனி தமிழ் வேட்பாளர் என்ற கதை தற்போது காணாமல் போகும் நிலைமையே தற்போது தென்படுகிறது என்பதை காணமுடிகிறது எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 10 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.