சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை நெருங்கும் இலங்கை
தொழிலாளர் வர்க்க மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் கடனுக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளாக இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்தித்தளம் ஒன்றிகு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிணையெடுப்புத் திட்டத்துடன் வந்த பொருளாதார சீர்திருத்தச் செலவை பணக்காரர்களே அதிகம் ஏற்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று குறித்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
கடன் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு
வரி மற்றும் மின்சார விலை உயர்வுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகள், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, செல்வாக்கற்றவராக ஆக்கி, செப்டம்பர் 21 வாக்கெடுப்பின்போது அவருக்கு கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாக கூறியுள்ளனர்.
இந்தநிலையில், இது கொள்கை நிச்சயமற்ற தன்மையை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 350 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட அடுத்த தவணை நிதியை வழங்குவதற்கு முன், சர்வதேச நாணய நிதியம், தமது கடன் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நடத்த வேண்டும் அதேநேரம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை அரசாங்கம் இன்னும் சில கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்யவில்லை.
தனியார் கடன் வழங்குநர்கள்
இதற்கிடையில் நாட்டின் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் இலங்கை அரச அதிகாரிகள் இந்த வாரம் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தி 12.6 பில்லியன் டொலர் செலுத்தாத கடன் பத்திரங்களை மறுசீரமைக்க இணங்கியிருக்கிறார்கள்.
இதன்படி தேர்தலுக்கு முன்னர், கடன் தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு அரசாங்கம் முயன்று வருவதாகவும், தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கை அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் என்ன மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களைத் தெரிவிக்க சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார்.
இருப்பினும் தற்போதைய நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை அவர் விமர்சித்துள்ளதாக அந்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |