நுவரெலியா மாவட்டத்தில் மாடுகளைப் பாதிக்கும் தோல் நோய்
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு மாடுகளைப் பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாகவும் இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தைக் கணிசமான அளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலையின் பின்னர் நுளம்புகள் ஏனைய பூச்சிகளின் பெருக்கம் அதிகரிப்பு காரணமாக குறித்த நோய் தீவிரமாகப் பரவல் அடைந்துள்ளதாகவும் , லம்பி நோயைக் கடத்தும் பூச்சிகள் முப்பது கிலோமீட்டர் வரை பறக்கக்கூடியதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக இடங்களில் வேகமாக பரவ ஏதுவாக அமைந்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
இதனால் தினமும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட வரையான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் இதில் அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது என மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த லம்பி தோல் நோய் எனும் பெரியம்மை காரணமாக பாலுற்பத்தி குறைதல், உணவு உட்கொள்தல் குறைதல், கன்றுகளில் வளர்ச்சி குன்றுதல், உடல் மெலிவடைதல் தோலில் நிரந்தர அடையாளம் ஏற்படுதல், பசுக்களில் கருச்சிதைவும் அதிகமாக ஆண் மாடுகளில் மலட்டு தன்மையும் ஏற்படுதல் போன்ற காரணிகளால் அதிக பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுமன்றி அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்ப்பதனால் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |