நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளார்
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு தனிப்பட்ட ரீதியில் அனுப்பி வைக்கப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு பொதுவாக அனுப்பி வைக்காது தலைவரின் பார்வைக்கு மாத்திரம்" எனக் குறிப்பிட்டு ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு இரவோடு இரவாக அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரிகளின் இந்தச் செயல் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் குறைத்து மதிப்பிடும் ஒரு நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அதிகாரிகளின் இந்த தொழில்முறைமைகளுக்கு முரணான செயலை ஒரு குழுவாகத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிதி மோசடி குறித்து ஒட்டுமொத்த நாடும் உலகமும் அறிந்துள்ள பின்னணியில், இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கான தெளிவான மக்கள் பொறுப்பு இக்குழுவிற்கு இருப்பதாக ஹர்ஷன ராஜகருண சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காகப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. "இதற்கு இவ்வளவு காலம் தேவையா?" என குழுவிற்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தபோதிலும், அவர்களுக்கு நியாயமான காலம் வழங்கப்பட்டது.
எனினும், அந்த அவகாசத்தைப் பயன்படுத்திய அதிகாரிகள், மிகவும் தொழில்முறையற்ற வகையில் இந்த அறிக்கையைத் தலைவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் மேல் உறையில் தெளிவாக "தலைவரின் பார்வைக்கு மாத்திரம்" என்று எழுதப்பட்டுள்ளது. இது நிதிக்குழுவிற்குத் தகவல்களை மறைத்து, பாரிய திருட்டை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், இந்நாட்டு மக்கள் மீது வரிகளைச் சுமத்திச் சேகரிக்கப்பட்ட பொதுப் பணம் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படும் போது, அதுகுறித்த உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாக ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாகக் கூறி அறிக்கைகளை மறைக்க அதிகாரிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், குழுவின் உத்தரவுக்கு இணங்கச் செயற்பட அனைவரும் கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தினார்.
நாளை நாளுக்குள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பார்வையிடக்கூடிய வகையில் திறந்த அறிக்கை ஒன்றை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் வியாழக்கிழமையன்று சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் மீண்டும் ஒருமுறை அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam