ஐக்கிய மக்கள் சக்தி இனவாதக் கட்சி அல்ல! நளின் பண்டார எம்.பி. தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒருபோதும் இனவாதக் கட்சி அல்ல என்றும், நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(15.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய மக்கள் சக்தி என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதக் கட்சி கிடையாது. சிறுபான்மை இனத்துக்கோ அல்லது பெரும்பான்மை இனத்துக்கோ இங்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை.
சம உரிமை
நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான கொள்கையாகும்.
சிறுபான்மையினத்தவர்கள் மத்தியிலும், பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியிலும் சில அடிப்படைவாதிகள் இருக்கலாம். அந்த அடிப்படைவாதிகளைப் பற்றியே லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டிருக்கக்கூடும்.

ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட சம்பவத்தின் போது, புலம்பெயர் அமைப்புகளும் (டயஸ்போரா) சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் உள்ள சில அடிப்படைவாதிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
நான் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக அந்த இனங்களில் உள்ள சில அடிப்படைவாதிகளைப் பற்றியே குறிப்பிடுகின்றேன் எனக் கூறினார்.