பல பகுதிகளிலிருந்தும் கொழும்பிற்குள் நுழைந்த பெருமளவான மக்கள்! ஸ்தம்பிக்கும் இலங்கையின் தலைநகரம் (VIDEO)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியானது காலி முகத்திடலை நோக்கி செல்வதாக தெரியவருகிறது.
இதில் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தை கண்டன பேரணியாக முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கண்டன பேரணியானது கொள்ளுபிட்டி சந்தியை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நிலையில் கொழும்பிற்குள் அனுமதிக்கப்படாது திருப்பியனுப்பப்பட்ட நாட்டின் வேறு சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது இடங்களிலேயே எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் இடம்பெறும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் வருகை தந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு திரண்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இந்த போராட்டம் காரணமாக கொழும்பிலுள்ள சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி போகம்பர, ஹல்துமுல்ல, அரலங்வில, பாணங்துர போன்ற பகுதிகளில் இருந்து இவ்வாறு மக்கள் பேருந்துகளில் வருகின்றனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்திற்காக வருபவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், சில பகுதிகளில் இவ்வாறு வருவோர் திருப்பியனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகள் சில நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



