அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தடைசெய்யப்பட்ட (பிளாக் லிஸ்ட்) நிறுவனமொன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான வங்கி அட்டையை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது இந்திய பயணத்தின் போது குறித்த வங்கி அட்டையை பயன்படுத்தி, ஒரு மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, தடைசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரின் வங்கி அட்டையை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால், அதைப்பற்றி உடனடியாக நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நிரோஷன் பாதுக்கவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
நிரோஷன் பாதுக்க நடத்திய ஊடக சந்திப்பில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய கடன் அட்டையை பயன்படுத்தவில்லை எனவும், இது பகைமையால் உருவாக்கப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த 1 பில்லியன் ரூபா இழப்பீடு தொகை 14 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், அந்தத் தொகையை வசூலிக்க நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சட்ட நிபந்தனைக் கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.