தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்படும் பெட்டிகள் தீர்மானித்ததா!
தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்படும் பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என்கின்ற சந்தேகமும் எழாமலில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் இன்றையதினம்(18.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதி உச்சமானக அளவில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்டசியின் சிரேஷ்ட தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
எனினும், இக்கோரிக்கையை கடந்த 2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என்ற கேள்வி தமிழ் மக்களிடையே இன்று எழுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் செப்ரம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலில் மும்முனை போட்டிக்கான சூழல் காணப்படும் நிலையில் சுயநிர்ணயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் வேட்பாளர்கள் முன்வைக்கப் போகின்றார்கள் என்பதை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி, தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் அவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கோரியுள்ளதாக தெரியவருகின்றது.
அவ்வாறாயின் சம்பந்தன் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஏன் இதனை வலியுறுத்தவில்லை.
இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவரது இந்த கூற்றை கூட்டமைப்பினர் எவரும் மறுத்திருக்கவும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |