சிங்கள மக்களுக்கு எம்மில் இருப்பது ஒரு அனுதாபம் மாத்திரமே: அது நாளைக்கே போய்விடும் - சிறிகாந்தா (Video)
சிங்கள மக்களுக்கு எம்மில் இருப்பது ஒரு அனுதாபம் மாத்திரமே, அது நாளைக்கே போய்விடும் எனத் தமிழ்த் தேசிய கட்சியினுடைய தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில், ''சிங்கள மக்கள் தற்போது தமிழர் தீர்வு தொடர்பிலான பதாகைகளை ஏந்தியிருக்கின்ற நிலையிலும் அவர்களுடைய பொருளாதார பிரச்சினை தீர்ந்த பிறகும் இதே மனநிலையில் இருப்பார்களா'' என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தலைமுறை அதிலும் சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தெளிவான அறிவு கொண்டதல்ல.
இந்த நாட்டிலே இனப்பிரச்சினை எப்போது ஆரம்பித்தது, எங்கே ஆரம்பித்தது, தமிழர்களுக்கு எவ்வாறான அநியாயங்கள் எல்லாம் இடம்பெற்றன என்பது தொடர்பில் அவர்களுக்குத் தெரியாது.
சிங்கள அரசியல்வாதிகள் சிலருக்குக் கூட தெரியாது; அவர்கள் இருளிலிருந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அநீதி இழைக்கப்பட்டது. அரச பயங்கரவாதத்தால் பல தடவைகள் பெருமளவில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.
இது அவர்களுக்கு ஓரளவு திரிந்துள்ளது, அதனால் ஒரு அனுதாபமுள்ளது.
ஆனால் அது நாளைக்குப் போய்விடும். இந்நிலையில் வெண்ணெய் திரண்டு வருகிறபோது நாங்கள் செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.



