மட்டக்களப்பு - சின்ன ஊறணி கிராம சேவகர் பிரிவு நாளை திறப்பு
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ற ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை திறப்பதற்கு தேசிய கோவிட் தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மண்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலமீன்மடு, கல்லடி வேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகள் கடந்த 14 திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.
இதில், நேற்று முன்தினம் பாலமீன்மடு, கல்லடி வேலூர், திருச்செந்தூர், ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சின்ன ஊறணி கிராம சேவகர் பிரிவை நாளை திறக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.