விகாராதிபதியை இடமாற்றக்கோரி சிங்கள மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடாவில் உள்ள விகாராதிபதியை இடமாற்றக்கோரி அப்பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
புன்னக்குடா பகுதியில் உள்ள புன்னியாராஜ விகாரையின் விகாராதிபதி தம்பக்கல வனரத்ன தேரரை குறித்த விகாரையில் இருந்து இடம்மாற்றும் படியே குறித்த பகுதியில் வாழும் சிங்கள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த விகாரையில் சிறுவன் ஒருவரை இத் தேரர் துஸ்பிரயோகப்படுத்தி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
தமக்கு இவர் தேவை இல்லை எனவும், வழிபாட்டிற்கு விகாரைக்கு செல்ல பிள்ளைகள் அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
புன்னக்குடா பகுதியில் சுமார் 20 சிங்கள குடும்பங்கள் கடல் பிரதேசத்தை அன்டி வாழ்ந்துவருகின்றனர். சுமார் 01 மணி நேரம் இன்றைய போராட்டத்தினை குறித்த பகுதி சிங்கள மக்கள் மேற்கொண்டிருந்ததுடன் கையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கறுப்பு கொடிகளையும் கையில் தாங்கிஇருந்தனர்.
இதில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
