வன்மத்தை ஏற்படுத்தும் தியாகதீபம் திலீபனின் ஊர்திப்பவனி தாக்குதல்: ஊடக பேச்சாளர் தர்ஷன் கண்டணம்
தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் கண்டணம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (17.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய கடந்த காலங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துக் கூறுகின்ற செயல் இன்று ஈழ தேசத்தில் நிகழ்ந்திருக்கின்றது.
குறிப்பாக தியாக தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் காலப்பகுதியிலே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட்டோர் நினைவேந்தலை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக இன்றைய தினம் திருகோணமலை கப்பல்துறை வழியினூடாக பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில் பெண்கள் உட்பட இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த ஊர்தியினை தாக்கியுள்ளார்கள்.
தாக்கியது மட்டுமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்
இதற்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. இன நல்லிணக்கம் தொடர்பாக பேசிக்கொள்கின்ற அரசாங்கம் உண்மையிலேயே நீதி நியாயத்துடன் இராணுவம் பொலிஸ் தரப்புகள் செயற்பட வேண்டும்.
இன்று இடம்பெற்ற செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுள்ளது. தற்போதும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவினது நினைவேந்தலில் அவரது கோரிக்கையை முன்வைத்து அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்கின்ற தருணத்தில் இவ்வாறான செயற்பாடு நிகழ்ந்திருக்கின்றமை மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி இன்னமும் சிங்களவர்களினுடைய தமிழர்கள் மீதான வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது.
இதனை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி.ஜெல்சின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் உள்ளிட்டவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.