சிங்கள குடியேற்றங்கள் அபாயமுள்ளவை: சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
சிங்கள குடியேற்றங்கள் அபாயமுள்ளவை. தமிழ் மக்களை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதில் பங்களிப்புச் செய்பவை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு, தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்கதையாக உள்ளன. ஆக்கிரமித்தல் என்ற தீர்மானம் சிறீலங்கா அரசினால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாகவே இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. அண்மைய வாரத்தில் வவுனியா நெடுங்கேணி வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திரிவைத்த குளம் பகுதியில் 1000 ஏக்கர் வரையிலான தமிழர்களின் பூர்வீக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் இந்த இடத்தில் விவசாயம் செய்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் தமது காணிகளை துப்புரவு செய்ய முனைந்த போது வனவள பரிபாலன திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. 2022 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். எனினும் காணிகளுக்கு செல்வதற்கு வனபரிபாலன திணைக்களமும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும் அனுமதி வழங்கவில்லை. தற்போது சட்ட ரீதியற்ற வகையில் பொதுஜன முன்னணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டபோது வனபரிபாலனத் திணைக்களமும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும் மௌனமாக இருந்தன.
தமிழர்கள் ஒரு கல்லினை நட்டாலே ஓடோடி வரும் வனபரிபாலனத் திணைக்களம், இந்த ஆக்கிரமிப்பு விடையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வனபரிபாலன திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பனவும் இணைந்து தான் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் இது பற்றி வனவள பரிபாலனத் திணைக்களத்திடமும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடமும் விசாரித்த போது தாங்கள் அனுமதி எவற்றையும் வழங்கவில்லை எனக் கூறியதாகவே ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்கள் நூற்றுக்கணக்கான பாலை மரங்களை வெட்டி வீழ்த்தியதோடு 15 வரையிலான குடிசைகளையும் கட்டியுள்ளனர். இந்த விடயத்தில் வவுனியா அரசாங்க அதிபரிடமோ, வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடமோ, வவுனியா வடக்கு பிரதேசபையிடமோ எந்த அனுமதியும் பெறப்படவில்லை. வெடிவைத்த கல்லு கிராம சேவையாளருக்கும் எந்தவிதத் தகவலும் தெரியப்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பு செய்தவர்களை பொலிஸார் கைது செய்திருக்க வேண்டும் அதுவும் நடைபெறவில்லை.
சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறும் போது அரச அதிகார நிறுவனங்கள் மௌனமாக ஒத்துழைப்பதே வழக்கம். அது திரிவைத்த குளம் விவகாரத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் வனபரிபாலனத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, படையினர், அரசியல் வாதிகள் என்போரின் கூட்டுச் செயற்பாடு இடம்பெற்றுள்ளது. இவ் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையிலான குழுவினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்டக் குழுவினர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் என்போர் பார்வையிட்டுள்ளனர். உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களும் இதற்குள் அடக்கம். ரவிகரன் 1000 ஏக்கர் வரை ஆக்கிரமித்துள்ளனர் என கூறியிருக்கின்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 600 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். இவ் ஆக்கிரமிப்பு வெடிவைத்தகல்லு சந்தி வரை பரந்திருக்கின்றது என்றும் கூறியுள்ளனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் 35 - 40 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றார். அவர்கள் ஏன் குறைத்து கூற முற்படுகின்றார் என்பது அவருக்கே வெளிச்சம்.
ஆக்கிரமிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கக் கட்சியில் இருப்பதால் இதனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். தேசிய மக்கள் சக்தியின் தலைமை இந்த விவகாரம் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை. அமைச்சர் சந்திரசேகரனும்வாய் திறக்கவில்லை. படையினர் சம்பந்தப்படாமல் இந்த ஆக்கிரமிப்பு இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. படையினருடன் முரண்படுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைமை தயாராக இல்லாமல் இருக்கலாம்.
படையினரின் செயற்பாடு
ஒரு தடவை சந்தித்தபோது சுமந்திரன் இந்த ஆக்கிரமிப்பு எல்லாம் படையினரின் செயற்பாடு எனக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தமிழ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அக்கறை செலுத்தி இருப்பது பாராட்டத்தக்க விடயம். இது எதிர்ப்பின் கனதியை அதிகரிப்பதற்கு உதவியாக அமையும். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ரவிகரன் அக்கறை செலுத்தி இருந்தாரே தவிர சத்தியலிங்கம் எந்த வித அக்கறையையும் காட்டவில்லை. இத்தனைக்கும் அவரது பொறுப்பிலுள்ள வவுனியா மாவட்டத்திற்குள்ளேயே திரிவைத்த குளம் பிரதேசம் இருக்கின்றது.
வெடிவைத்த கல்லு, அதற்கு முன்னால் உள்ள மருதோடை என்பன பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள். யுத்தத்திற்கு முன்னர் வெடிவைத்தகல்லு சந்தி வரை வவுனியா டிப்போவிற்கு சொந்தமான பேருந்து சென்று வந்தது. காரைநகர் டிப்போவிற்கு சொந்தமான பேருந்து மருதோடை வரை சென்று வந்தது. வெடிவைத்த கல்லுக்கு அருகில் தான் காந்தியத்தின் நாவலர் பண்ணை இருந்தது. 1977 ஆம் ஆண்டு இன அழிப்பில் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இக்கட்டுரையாளரும் இக்குடியேற்றச் செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தார். யுத்தத்தைத் தொடர்ந்து அவர்களும் இடம் பெயர்ந்திருந்தனர். தற்போது மிகச் சொற்பளவான மக்களே அங்கு வசிப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்தத் தமிழக் கிராமங்களைப் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். வெடிவத்த கல்லுக்கு சுமார் 10 மைல் தொலைவில் தான் கொக்கச்சான் குளம் இருந்தது. கொக்கச்சான் குளம் புனரமைப்பு செய்யப்பட்டபோது 1980 களின் ஆரம்பத்தில் காந்தீயத்தின் முயற்சியினால் தமிழ் இளைஞர்கள் அங்கு குடியேறினர். அவர்கள் அங்கு வந்த சிங்களக் காடையர்களினால் அடித்து துரத்தப்பட்டனர். அவர்களால் கட்டப்பட்ட குடிசைகளும் பிடுங்கி எறியப்பட்டன. அதன் போது வருகை தந்த பொலிஸாரும் சிங்களவர்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். புளட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியார் இக்குடியேற்ற முயற்சிகளில் முன்னின்று பணியாற்றினார். தற்போது அந்தப் பிரதேசம் முழு சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. “கலாபோகஸ்வேவ” என அதற்கு பெயரும் இடப்பட்டுள்ளது.
தமிழ்ப்பெயரான கொக்கச்சான்குளம் கலாபோகஸ்வேவ என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திற்கு அருகில் நாமல் ராஜபக்சவின் பெயரில் “நாமல் புர” என்ற சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிங்களப் பிரதேசத்திற்கு அனுராதபுரத்திலிருந்தும், நெடுங்கேணியிலிருந்தும் வீதிகள் உள்ளன. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஒருபோதும் ஒரு வகைப்பட்ட குடியேற்றங்களாக இருக்கவில்லை. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழிற்குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம், முப்படை முகாம்களுக்கான குடியேற்றம் என பல வகைப்பட்டவைகளாக உள்ளன.
வவுனியா வடக்கு குடியேற்றங்கள் முழுக்க முழுக்க சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் மேற்கூறிய எல்லா வகைக் குடியேற்றங்களும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. தற்போது அக் குடியேற்ற முயற்சிகள் வவுனியா வடக்கு பிரதேசத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பரீட்சித்தலுக்கு பார்க்கப்படுகின்றன. கொக்குளாய், நாயாறு குடியேற்றங்கள் மீனவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குடியேற்றங்களாகும். தற்போது வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஐந்து சிங்கள உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். சட்டவிரோத விவசாயக் குடியேற்றங்கள் முன்னர் பௌத்த பிக்குகளே முன்னிலையில் நின்றனர். திருகோணமலை மாவட்ட சட்டவிரோத குடியேற்றங்களிலும் அவர்களே முன்னிலையில் நின்றனர்.
தற்போதும் குச்சவெளி, தென்னமரவடி குடியேற்றங்களில் அவர்களே முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களுக்கு இராணுவத்தினர் பக்கபலமாக உள்ளனர். கொக்கச்சான்குள குடியேற்றத்தையும் பௌத்த பிக்குவே முன்நின்று மேற்கொண்டார். சட்டவிரோத விவசாயக் குடியேற்றங்களை அமைக்கும் போது பௌத்த பிக்கு முதலில் 10 பேருடன் வருவார். வளமான குளத்தை ஒட்டி 10 பேரையும் குடியேற்றுவார். பின்னர் அவ் 10 பேரும் தங்கள் உறவினர்களை கொண்டு வந்து குடியேற்றுவார். இப்படியே பெருகிப் பெருகி அது இறுதியில் ஒரு சிங்களக் கிராமமாகிவிடும்.
பௌத்த பிக்கு தனது செல்வாக்கினை பயன்படுத்தி சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதோடு பாடசாலைகள், மருத்துவமனைகள், வீதிகள் என்பவற்றையும் அமைத்துக் கொடுப்பார். வீதிகள் எப்போதும் சிங்களப் பிரதேசங்களுடன் போக்குவரத்து செய்யக்கூடியதாகவே அமைந்திருக்கும். குடியேற்றப் பிரதேசங்களும் குளத்தையொட்டி வளமான பிரதேசங்களாக அமைந்திருக்கும். ஆரம்பத்தில் அரசு திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களிலேயே அக்கறை கொண்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கல்லோயாத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட அல்லைத் திட்டம், கந்தளாய்த் திட்டம், மொறவேவாவேத் திட்டம், பதவியாத் திட்டம், மகாதிவுல்வெவத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பாவற்குள குடியேற்றத்திட்டம், மன்னார் மாவட்ட கொண்டச்சியில் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை குடியேற்றத் திட்டம், அனைத்தும் திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களாகும். தமிழ் மக்கள் சற்று விழிப்பாக இருப்பதினால் திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களை பகிரங்கமாகச் செய்வது தற்போது கடினம்.
சட்டவிரோத குடியேற்றங்கள்
அது பல்வேறு வழிகளிலும் அரசியல் அழுத்தங்களைக் கொண்டு வரப் பார்க்கும். இதனால் தற்போது முழுக்க முழுக்க அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றங்களிலேயே தங்கியிருக்கின்றது. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மயிலத்த மடுக்குடியேற்றம், திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட குச்சவெளி, தென்னமரவடி குடியேற்றங்கள், வவுனியா வடக்குக் குடியேற்றங்கள், வெலிஓயாக் குடியேற்றங்கள் அனைத்தும் சட்டவிரோத குடியேற்றங்களே. சட்டவிரோதக் குடியேற்றங்களை பகிரங்கமாகச் செய்யத் தேவையில்லை. இரகசியமாகவே செய்யலாம்.
வவுனியா வடக்குப் பிரதேச குடியேற்றங்களைப் பலப்படுத்துவதற்காக கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளிலும் அரசு இறங்கியுள்ளது. வவுனியா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்க்கு செல்லும் “மாஓயாவின்” பிரதான கிளை நதியே கிவுல்ஓயாவாகும். இந்தக் கிவுல் ஓயாவை மையப்படுத்தி நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் வவுனியா வடக்கு குடியேற்றங்களுக்கும், முல்லைத்தீவு குடியேற்றங்களுக்கும் நீரப்பாசன வசதிகளைச் செய்து கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கிவுல் ஓயா திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுமாக இருந்தால் வவுனியா வடக்கு குடியேற்றங்களும், முல்லைத் தீவு குடியேற்றங்களும், சகல வகைகளிலும் பலமடையும். மறுபக்கத்தில் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான வெடிவைத்த கல்லு, மருதோடை என்பன நீரில் மூழ்கக் கூடிய அபாயமும் உருவாகும். நெடுங்கேணிக்கு இன்னொரு பக்கத்தில் 10 கிலோமீற்றர் தொலைவில் தான் கென்ற் பண்ணை, டொலர் பண்ணை, சிலோன் தியட்டர் பண்ணை என்கின்ற தமிழ் முதலீட்டாளர்களின் பண்ணைகள் இருந்தன. கெனற் பண்ணையிலும், டொலர் பண்ணையிலும் 1977 ஆம் ஆண்டு இன அழிப்பில் அகதிகளான மலையக மக்களை மனித முன்னேற்ற நிலையம், காந்தீயம் என்பன குடியேற்றியிருந்தன. பண்ணைகளின் நிர்வாகம் அன்பளிப்பாகவே இந்த நிலங்களை வழங்கி இருந்தது.
1980களின் பிற்பகுதியில் இப்பகுதி மக்கள் படையினரால் துரத்தப்பட்டு அங்கு சிறையில் இருந்த சிங்களக் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்கு தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு கிணறுகளும் வெட்டிக் கொடுக்கப்பட்டன. காபற்வீதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. யுத்த காலத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களும் இடம் பெயர்ந்திருத்தனர். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் அவர்கள் குடியேற்றப்பட்டனர். புலிகளின் எல்லை முகாம் சிலோன் தியேட்டர் பண்ணையிலேயே அமைந்திருந்தது. வவுனியா வடக்கு குடியேற்றங்கள், கென்ற், டொலர் சிலோன் தியேட்டர் பண்ணை குடியேற்றங்கள், வெலிஓயா குடியேற்றங்கள் அனைத்தும் திருகோணமலை மாவட்டம், முல்லைத் தீவு மாவட்டம் வவுனியா மாவட்டம் சந்திக்கும் மைய இடங்களிலேயே அமைந்திருந்தன.
மாவட்டங்களுக்கிடையேயான மக்களின் தொடர்புகளை துண்டிப்பதும் இக்குடியேற்றங்களின் நோக்கமாகும். அதன் வழி தாயக நிலத்தொடர்ச்சியைத் துண்டிப்பதும் நோக்கமாகும். மொத்தத்தில் வவனியா வடக்கு, முல்லைத் தீவு மாவட்ட குடியேற்றங்கள் மிகுந்த அபாயமுள்ளவை. தமிழ் மக்களை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதில் பங்களிப்புச் செய்பவை.
இதனை வளர விடாமல் தடுப்பது தமிழ்த் தரப்பின் மிகப்பெரும் கடமையாகும். பெருந்தேசிய வாதத்தை கையாளல், சர்வதேச அரசியலைக் கையாளல் என்பவற்றுக்கு ஒருங்கிணைந்த அரசியல் எவ்வளவு அவசியமோ அதேபோல ஆக்கிரமிப்புகளைக் கையாள்வதற்கும் ஒருங்கிணைந்த அரசியல் அவசியமாகும் இதனை முகம் கொள்வதற்கு சர்வதேச அரசியல் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை யோசிப்பதும் அவசியமானது. தமிழ் தேசிய சக்திகள் இதனை கவனத்தில் எடுப்பார்களா என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |