நாடு அழிவின் விளிம்பில் நிற்கும்போதும் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாதம்
இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை கட்டுவதிலும், தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறது.
இவ்வாறு இனவழிப்பு செய்வதில் தொடர்ந்தும் ஈடுபட்டு தன் பொருளாதாரத்தை செலவழித்து வருகிறது. இதிலிருந்து இலங்கை சிங்கள பேரினவாத அரசியலில் எத்தகைய அரசியல் தலைவர்கள் வந்தாலும் அவர்கள் தேரவாத பௌத்தத்தின் 'நம்ம தீப' கொள்கையை கைவிட மாட்டார்கள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
வட-கிழக்கு தமிழர்களின் பலம் என்பது தாயக நிலத்தின் மீது குடியிருக்கும் தமிழ் மக்களின் இருப்பிலேயே தங்கியுள்ளது. எனவே தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது, அவர்களின் இனப்பரம்பல் செறிவை குறைப்பதுவும் சிங்கள பௌத்த இனவாதத்திற்கு அவசியமாகிறது.
அத்தோடு இந்தியாவிற்கான இலங்கைத்தீவின் இந்து சமுத்திர புவிசார் அரசியலை வெற்றிகொள்வதே சிங்கள பேரினவாதத்தின் பிராதானமான இலக்காகும். இந்தியாவின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து இலங்கையை விடுவித்துக்கொள்ள ஈழத்தமிழரை அவர்களது வட-கிழக்கு தாயகத்தில் இருந்து இல்லாது அகற்ற வேண்டும். அதற்காகத்தான் தமிழர் தாயகத்தை சிங்கள குடியேற்றத்தால் முற்றுகையிட்டு கபளீகரம் செய்வதை முதன்மையான மூலோபாயமாக வகுத்து கொண்டுள்ளார்கள்.
மேற்படி மூலோபாயத்தின் அடிப்படையாக பௌத்த விகாரைகளை தமிழ் மண்ணில் உருவாக்கி அவற்றை பராமரிக்கவென சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதன் மூலம் தமிழர் நிலத்தை கபளீகரம் செய்யும் செயன்முறை முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர்களின் புவிசார் கேந்திர முக்கியத்துவத்தையும்(Geo-strategic importance), புவிசார் அரசியல்(Geopolitics) பலத்தையும் சிங்கள குடியேற்றம் என்ற அரசியல் புவியியல் (Political Geography) நடவடிக்கையால் மாற்றி அமைத்துவிடுவது தான் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் மூலோபயமாகும். இந்த மூலோபாயத்தை அறியாமல் தமிழினம் தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறது.
இந்த துயரகரமான வரலாற்று போக்கில் தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களே துாரநோக்குள்ள எந்தவித மூலோபாயங்களும் அற்றவர்களாய் வெறும் தொழில் விளம்பரத்திற்காகவும், அமைச்சு பதவிகளுக்காகவும், அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும், அற்பத்தனமான பிரபலத்திற்காகவும், தமிழ் மண்ணை விற்றுப் பிழைக்கும் அரசியலில் ஜி.ஜி.பொன்னம்பலம் தொடக்கம் இரா சம்பந்தன் வரை தொடர்ந்து பயணிக்கும் தமிழினத்தினது அழிவு பாதை வரலாறு துயரகரமாய் நீண்டு செல்கிறது.
எனினும் குருந்தூர் புத்தர்சிலை விவகாரத்தில் பொருத்தமான நேரத்தில் கஜேந்திரகுமார் அணியினர் போராடி தற்காலிகமாக தடுத்து நிறுத்தியமை வரவேற்கத்தக்கது தான். ஆனால் அங்கு ஏனைய தமிழ் தேசியம் பேசும் அணியினர் பங்கெடுக்காமல் ஒழித்துக்கொண்டமை தமிழின விரோத குற்றமாகும்.
நாடு அழிவின் விளிம்பில் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்களை அழிப்பதில் சிங்களவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதும், மகாவம்ச மனநிலையை எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள பௌத்தர்கள் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பதுவும் தெளிவாக தெரிகிறது. இதற்கு 'கோட்டா கோ கோம்' ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட விதிவிலக்கல்ல.
ஏனெனில் இந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் அங்கே புதிய பௌத்த தாதுகோபம் அமைக்கப்பட்டு புத்தர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது. அதற்கு ஒரு தொகுதி சிங்கள மக்களும் வருகை தந்திருந்தனர்.
இதற்கு எதிராக 'கோட்டா கோ கோம்' ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயை திறக்கவில்லை. அது பற்றி தமிழர் தரப்பு ஆர்பாட்டக்காரர்களுடன் பேசியதற்கு அவர்கள் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை என்பதிலிருந்து சாதாரண சிங்கள மக்களோ, சிங்களப் பேரினவாத சக்திகளோ, ஆளும் உயர் குழாமோ தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நியாயத்தையும், நீதியையும், உரிமையை வழங்க தயார் இல்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துகாட்டுகிறது.
சிங்கள முற்போக்கு இடதுசாரி தலைவர்களான கொல்வின் ஆர்.டி சில்வா, என்.எம் பெரேரா போன்றவர்கள் கூட தமிழர்களின் உரிமைகளை மறைப்பதற்காகவே தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதற்கு இலங்கை முதலாம் குடியரசு யாப்பு ஆக்கத்தில் அவர்கள் மூளையாக செயற்பட்டதை காணமுடிகிறது.
இந்த அடிப்படையில் இலங்கையின் தமிழின எதிர்ப்பு எவ்வாறு பௌத்த மதத்தின் ஊடாக அடித்தட்டு சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களே முதன்முதலில் இலங்கைத்தீவில் பௌத்தத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தார்கள் என்பதையும், அவர்களே இலங்கையில் பௌத்தம் பரவுவதற்கான அனைத்து அடித்தளங்களையும் இட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்வதில் இருந்துதான் தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான மூலோபயத்தை வகுத்து, தமக்கான தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.
இலங்கை வரலாற்றை சிங்களவர்களுடைய நோக்கிலிருந்து பார்ப்போமானால் அது மகாவம்சத்தில் இருந்துதான் அவர்களது வரலாற்றை பார்க்க முடிகிறது. இந்த மகாவம்சம் உண்மையில் ஒரு வரலாற்று நூல் அல்ல. அது ஒரு பௌத்தமத காவியம். பௌத்த மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தருவதனால் முக்கியத்துவம் பெறுகிறது.
2500 ஆண்டுகால வரலாற்றை இடைவெளியின்றி தொடர்ச்சியான ஒழுங்கில் பதிவு செய்திருப்பதனால் மகாவம்சத்திற்கு உலகளாவிய மதிப்பும் உண்டு. ஆனால் அதில் கூறப்படுகின்ற தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாக இருப்பதைக் காணலாம். மகாநாமதேரர் தன்னுடைய விருப்புவாதத்தை (Idealism) கோட்பாடாக(Ideology ) மாற்றியமைத்துவிட்டார்.
கி. பி. 6ம் நூற்றாண்டு இலங்கையில் நிலவிய பௌத்த மதம் சார்ந்த அச்சங்களும் இந்தியா சார்ந்த ஐயங்களும் தமிழர் மீதான எதிர்ப்புணர்வு இருந்தமையினால் அந்த சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு கி.மு 5 நூற்றாண்டுக்கும் கி.பி 3ம் நூற்றாண்டு இடைப்பட்ட 800 ஆண்டுகாலத்திற்கான வரலாற்றை 1100 ஆண்டுகளுக்கு பின் இருந்துகொண்டு தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததாக நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு தன்னுடைய இலட்சிய வாதத்திற்க்கு ஏற்ற வகையில் தான் கண்ட சம்பவங்களை திரித்து புனைகதைகளை உருவாக்கி மகாவம்சத்தில் பதிந்துள்ளார்.
ஏற்கனவே இருக்கின்ற வரலாற்றுடன் புதிதாக கற்பனை கதைகளையும், கதாபாத்திரங்களையும், இயற்கை அமைப்புக்களையும் ஒன்றிணைத்து புதிய வடிவம் ஒன்றை கொடுத்து ஒரு புதிய வரலாறு படைத்தார் அதுவே தம்ம தீப கோட்பாடாக உருவம் பெற்றது. அதன் முக்கிய அம்சங்களாவன முறையே,
1) இலங்கை பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு.
2 விஜயனே இலங்கையின் முதல் மனிதன்.
3) விஜயனும் அவனுடைய தோழர்களுமே பௌத்தத்தை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
4) விஜயனுடையதே இலங்கையின் முதல் அரசு.
இவ்வாறு இனம், மதம், மொழி, நாடு, அரசு ஆகிய ஐந்தினையும் பின்னி பிணைந்து உருவாக்கப்பட்டதே தம்மதீப கோட்பாடாகும்.
இத்தகைய மகாவம்சம் ஐரோப்பியர் காலத்தின் இறுதிகாலம் வரை 19ஆம் நூற்றாண்டில் பாலி மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்கப்படும் வரை சாதாரண சிங்கள மக்களுக்கு அறியப்படாத ஒன்றாகவும் அதே நேரத்தில் பௌத்த மகா சங்கங்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கு ஊட்டி வளர்க்கப்பட்டதாகவும் காணப்பட்டது.
1911ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் பரவி தனித்துவமான ஒரு கோட்பாடாக மக்கள் மனதில் ஆழ வேரூன்றிவிட்டது. மௌரிய பேரரசால் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கான மார்க்கமாக ஆக்கிரமிப்பு மதமாகவே மகிந்ததேரர் தேரவாத பௌத்தத்தை காவிவந்தார்.
இந்த ஆக்கிரமிப்பு பௌத்தம் இலங்கையில் தீசன் என்ற மன்னனுக்கு அசோகனுடைய பெயரான 'தேவநம்பிய' என்ற பெயரை பட்டப்பெயராக வழங்கி, அசோகன் அனுப்பிய முடியையும் வழங்கி முடிசூட்டு விழா நடத்தியதன் மூலம் இலங்கை ஒரு தேரவாத பௌத்த நாடு என்றும், அது அசோக சக்கரவர்த்திக்கு கீழ்பட்ட நாடு என்பதுவும் நிறுவப்பட்டது.
ஆனால் இவ்வாறு ஆக்கிரமிப்பு மதமாக இலங்கைக்கு வந்த பௌத்தம் பின்னாளில் அந்த மதத்தையே தனக்குரிய பாதுகாப்பு கவசமாக, அதையே கேடயமாக்கி பௌத்தம் எங்கிருந்து வந்ததோ அந்த இந்திய தேசத்திற்கு எதிராகவே தன்னை பலப்படுத்தி வலுப்படுத்தியுள்ளது.
பௌத்த மனநிலை என்பது இன்று தமிழர்களுக்கு எதிராக இருப்பது தென் இந்தியர்கள மீது கொண்ட வெறுப்பும் பகை உணர்வும் தான். அதுவே தமிழர்களை இந்தியாவின் கருவிகள் என எண்ணுவற்கும் காரணமாகிறது.
பௌத்த துறவிகள் எங்கெல்லாம் சென்றாலும் அவர்கள் அந்த நாடுகளின் அரசுகளை இலக்குவைத்து அந்த அரசுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததை பௌத்தத்தின் வரலாற்றெங்கிலும் காணமுடியும்.
இலங்கையின் அமைவிடம் காரணமாக வரலாற்றுக் காலங்களில் இலங்கையில் பௌத்தம் எவ்வாறு பரவியது என்பது பற்றி ஆராய்வது அவசியமானது.
இலங்கைக்கு கி.பி. 247ல் வந்த மகிந்ததேரர்ருடன் தான் தேரவாத பௌத்தம் இலங்கையில் பரவல் அடைந்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் வட இலங்கையில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையின் வடபகுதியில் மகாயான பௌத்தம் பரவி இருந்தமைக்கான ஆதாரங்களை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் மகாயன பௌத்தத்தை சார்ந்ததாகவும் அவற்றில் பெரும்பாணவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களாகவும் காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்று காப்பியங்கள் பௌத்த காப்பியங்களாகவும் அமைவதைக் காணலாம்.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் மணிபல்லவத்திலுள்ள(நயினாதீவு) நாகவிகாரை பற்றியும், அங்கு மகாயான பௌத்த அறநெறி கற்பிக்கப்பட்டமை பற்றியும் குறிப்புக்கள் பரவலாக உள்ளன. தமிழகத்திலும் வட இலங்கையிலும் மகாயான பௌத்தம் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கிவிட்டது என்பதனை வடபகுதி தொல்லியல் ஆதாரங்கள் துல்லியமாக நிரூபிக்கின்றன.
கி.பி 7ம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் மகாயான பௌத்தம் இலங்கையின் வடக்கிலும் தமிழகத்திலும் அழிவடையத்தொடங்கி கி.பி 10ம் நுாற்றாண்டில் முற்றாக அழிந்துபோயிற்று. ஆனால் வடக்கு கிழக்கில் மகாயான பௌத்தபள்ளிகளும், விகாரைகளும் தொல்லிய எச்சங்களாக உள்ளன. இந்த தமிழர் வளர்த்த மகாயான பௌத்த எச்சங்களை இன்று சிங்கள தேரவாத பௌத்தர்கள் உரிமைகொண்டாட முற்படுவது அபத்தமானது.
இலங்கைத்தீவில் மகாயானபௌத்தத்தின் அழிவின் பின் சிங்கள தேரவாதபௌத்தம் மகாயான பௌத்தத்தின் கோட்பாடுகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொண்டதை காணமுடிகிறது. தேரவாத பௌத்தம் புத்தரின் தந்ததாதுவையும் அவருடைய காலடிச்சுவட்டையும் வழிபடும் வழக்கத்தையே கொண்டது. ஆனால் மகாயான பௌத்தம் புத்தரை சஜன நிலையிலும், அமர்ந்த நிலையிலும் என பல்வேறு வடிவங்களில் புத்த சிலைகளை அமைத்து சைவ, வைணவ வழிபாட்டு முறைகளை பின்பற்றும் நடைமுறையை கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம்.
இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தம் என்பது உண்மையில் தேரவாத பௌத்தம் அல்ல. அது மகாயான பௌத்தத்தின் பெரும்பகுதியை உள்வாங்கிய பௌத்த மதமேயாகும்.
இந்த மகாயான பௌத்தத்தின் பெரும்பகுதியை தேரவாதம் எவ்வாறு உள்வாங்கினார்கள் என்பதற்கு தமிழகத்தில் சைவ வைணவ பக்தி இயக்கங்களின் எழுச்சியும் அவர்களால் துரத்தியடிக்கப்பட்ட பௌத்த துறவிகளும் பௌத்தர்களும் தென்னிலங்கையில் தஞ்சமடைந்து தென்னிலங்கையில் இருந்த பௌத்தர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கச் செய்தனர்.
அந்த அதிகரிப்பின் விளைவாக மகாயானத்தின் செல்வாக்கும் தேரவாத பௌத்தத்தில் உச்சம்பெற்றது. அதுவே இன்று மகாயனமா? தேரவாதமா? என்று சொல்ல முடியாத ஒரு முற்றிலும் மாறுபட்ட பௌத்தமே தென்னிலங்கையில் நிலவுகிறது என்பதுதான் வரலாற்றியல் ஆதாரங்கள் தரும் உண்மையாகும்.
இலங்கை பௌத்தம் பற்றி தமிழ் மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழ் மக்களின் மூதாதையர்கள் பௌத்தத்தை பின்பற்றி இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு சிங்கள பௌத்தத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்கு சரியான மூலோபாயத்தை தமிழ் மக்கள் வகுக்காவிட்டால் இலங்கை தீவு முழுவதிலும் சிங்கள-பௌத்தம்தான் இருந்தது என்கின்ற நிலையை தோற்றுவித்து விடுவார்கள்.
தமிழ் மக்கள் மகாயன பௌத்தத்தை தேரவாத பௌத்தத்தில் இருந்து பிரித்து காட்டுவதாகவும், தமிழர்கள் மகாயான பௌத்த ஆதாரங்களையும், மகாயான பௌத்த தளங்களை உரிமை கோருவதாகவும், எழுந்தால் மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்கள் தம்மையும், தமிழர் தாயகத்தையும் தற்காத்துக்கொள்ள முடியும்.