சட்டங்களை மீறி செயற்படுவதற்கு துணிய வேண்டும்: சுமந்திரன் ஆவேசம்
மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக அரசாங்கத்தின் குறித்த முயற்சிகளை முறியடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள்” எனும் தொனிப்பொருளில் நேற்று (6)நடைபெற்ற மக்கள் கருத்தரங்கில் உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நாட்டில் மாற்றமொன்று ஏற்பட்டதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த மாற்றத்தை முழுமையடைய விடாது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் அடக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், குறித்த சட்டங்கள் இல்லாமல் ஏற்னவே நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு அவர்களால் மக்களை அடக்க முடியுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.