இந்திய இழுவைப்படகுகளால் அழிக்கப்படும் இறால் வளம்!
முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் இறால் வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு கடலில் தற்போது இறால் சீசன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டினை சேர்ந்த இழுவைமடிப்படகுகள் கடலில் உள்ள அனைத்து வளங்களையும் அள்ளி செல்கின்றார்கள்.
அழிக்கப்படும் இறால் வளம்
இழுவை மடி படகுகளில் மூலம் நிலத்தில் கிடக்கும் சங்கு உள்ளிட்ட மீன்குஞ்சுகள்,இறால்கள் இறால் குஞ்சுகள் என அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன.
இதனால் இப்போது முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வலைகளில் இறால் பிடிபடுவது குறைவாக காணப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் ஒருமாதகாலமாக இயற்கை சீர் இன்மை காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத கடற்தொழிலாளர்கள் இப்போது கடற்தொழில் நடவடிக்கையில் மெல்ல மெல்ல ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடற்றொழிலாளர்களின் வலைகளில் மழைவெள்ளத்தினால் ஆற்றுபகுதி ஊடாக தரைகளில் கிடந்த கஞ்சல்கள் தடிகள் புற்கள் என்பன கடலின் நீரோட்டத்தில் ஓடும் ஆற்றுப்பகுதிகளில் காணப்படுகின்றன.
அரசாங்கம் நடவடிக்கை
இவ்வாறு கடலில் கிடக்கும் கஞ்சல்கள் வலைகளில் சிக்குண்டு அதனை பிரிப்பதிலோயே மீனவ குடும்பங்களின் காலம் போவதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்தநிலையில், முல்லைத்தீவு படகில் இறால் பிடி சீசன் நிலையில் முன்னைய காலங்களில் ஒரு படகிற்கு 10 கிலோவிற்கு மேல் பிடிபடும்.ஆனால் இப்போது அவ்வாறு இல்லாத நிலை காணப்படுகின்றது.

ஒரு கிலோ இறால் கூட வலையில் படுவது கஸ்ரமாக இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கடல்அடி மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத காலங்களில் எல்லாம் இந்திய இழுவை படகுகள் எங்கள் கடலில் உள்ள கடல் வளங்களை எல்லாம் சுரண்டி சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் எங்கள் கடல் எல்லைக்குள் வரும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.



