இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஸ்ரீ. ஸ்ரீ. ரவிசங்கர் குரு
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குரு எதிர்வரும் 18ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் மே 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை இம்முறை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த தகவலை சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கும்பாபிஷேக நிகழ்வு
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், “ நானும் எங்களுடைய ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கடந்த மாதம் இந்தியாவின் பெங்களுர் நகரிற்கு விஜயம் செய்து வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடைய ஆசிரமத்தில் சந்தித்து எங்களுடைய ஆலய கும்பாபிஷேக நிக்ழவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினோம்.
குருஜி அழைப்பிதழை பெற்றுக் கொண்டு தன்னுடைய வருகையை மிகவிரைவில் உறுதிப்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கு அமைய அவர் தற்போது தான் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.எனவே நாம் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.
குருஜி 18 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்து அங்கிருந்து அன்று மாலை நுவரெலியாவை வந்தடைந்து ஆலயத்தின் என்ணெய் காப்பு நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்.
அதனை தொடர்ந்து அடுத்த நாள் நடைபெறுகின்ற மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்கின்றார். கும்பாபிஷேக நிகழ்வில் கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதியும் கலந்து கொள்கின்றார்.
அத்துடன் இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.