கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன் எம்.பி.
கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு இன்று ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதம பேச்சாளராக சிரேஷ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான சோபனா ராஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பக் கால உறுப்பினரும் முன்னணியின் கவுன்சில் உறுப்பினருமான அனைத்து சந்தர்ப்பத்திலும் துணிச்சலுடன் ஒரு பெண்ணாகச் செயற்பட்ட கல்யாணி திலகேஸ்வரன் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான சோபனா ராஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்று உரையாற்றிய போதே எம்.பி இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாகப் பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றது. நான்கு பக்கங்களிலும் நெருக்கடி. குறிப்பாக அனுசா சந்திரசேகரனின் விலகல் மற்றது அரவிந்தகுமாரின் செயற்பாடு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தம் அத்துடன் எதிர்க் கட்சியில் இருக்க வேண்டிய நிலை என்பன முக்கியமானவை.
இவற்றுக்கு மத்தியிலேயே பொதுச் செயலாளராகப் பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார். அனைத்தும் இறுகியுள்ளது.
ஆகவே அங்கத்தவர்களின் ஒற்றுமையே இதிலிருந்து மீள ஒரே வழியாகும். 2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகும் கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மலைக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தப்படும், தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் கைச்சாத்திடுகின்றன.
எனவே மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையைத் தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல் பெண்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரணை அவசியம். தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. ஆகவே மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.' எனத் தெரிவித்துள்ளார்.





