துபாயில் உயிரிழந்த யாழ். இளைஞன்! பல தகவல்களை வெளியிட்டுள்ள தாயாரின் உருக்கமான கோரிக்கை (Video)
யாழ்ப்பாணம் - சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகனின் சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால் சடலத்தினை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்டோருக்கு கோரிக்கை விடுக்கும் முகமாக அவரது தாயார் நேற்று (14.04.2023) ஊடக சந்திப்பொன்றினை அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“படுகொலை செய்யப்பட்ட எனது மகன் கடந்த (19.04.2022) தினமன்று துபாய்க்கு வேலை வாய்ப்புக்காக ஃப்ரீ விசாவில் சென்று 6 மாதங்கள் விடுதி ஒன்றில் பணியாற்றினார்.
6 மாதகால வேலை நிபந்தனை
இந்த நிலையில் கடந்த 6 மாதங்கள் வேலை செய்தால் வர்க்கிங் விசா தருவதாக கூறினார்கள். அதனடிப்படையில் எனது மகன் 6 மாதங்கள் வேலை செய்ததையடுத்து வர்க்கிங் விசா 2 வருடங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வர்க்கிங் விசாவை வழங்கும் போது தங்குமிடம், சாப்பாடு என்பன இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்ட போதும் தங்குமிடம் வழங்கப்படவில்லை.
அவர் வெளியிலேயே வாடகைக்கு தங்கினார். விசா வழங்கப்பட்டதும் அந்த நாட்டு நாணயத்தில் 3000 வழங்குவதாக கூறிவிட்டு 1800 தான் வழங்கப்பட்டது.
எனது இரண்டாவது மகன் துபாய்க்கு சென்று ஒரு வாரத்தின் பின்னரே எனது மூத்த மகன் நிலக்சன் சென்றவர். இருவரும் ஒரு ஹோட்டலில் தான் வேலை செய்தார்கள்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி எனது இரண்டாவது மகன் எனக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மூத்த மகனின் சடலத்தை காட்டி, ''அம்மா எனக்கு விடுதியின் காவலர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, அண்ணா கத்தி குத்துக்கு உள்ளாகி அறையில் விழுந்து கிடப்பதாக கூறினார், அதற்கு பின்னர் இந்திய பெண் ஒருவரும் எனக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை கூறினார்.
அதற்கு பின்னர் நான் அறைக்கு சென்று பார்த்தவேளை அறை பூட்டப்பட்டு இருந்தது. அங்கு யாரும் இல்லை. கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தவேளை மின்விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு பார்த்தவேளை அண்ணா நெஞ்சில் கத்தி குத்தி இருந்தபடியே கீழே இரத்த வெள்ளத்தில் இருந்தார்.
அவர் அருகில் இருந்த சோபா செட்டையும் என்னையும் மீள மீள பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். அவரால் பேச முடியவில்லை. நான் வாய் மூலமாக சுவாசம் கொடுத்தேன். அதையும் மீறி அவர் உயிர் பிரிந்தது.
பொலிஸாருக்கு தகவல் வழங்கல்
இந்நிலையில் ஏற்கனவே விடுதி பாதுகாவலர் பொலிஸிற்கு தகவல் வழங்கி இருந்ததால் பொலிஸாரும் அங்கு வந்து விட்டனர்" என்று மகன் கூறினார்.
பின்னர் பொலிஸார் பிரிவின் நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு சடலம் மீட்டு செல்லப்பட்டுள்ளதுடன், எனது மகனையும் அங்கிருந்தவர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனது கடைசி மகனுக்கும் எனக்குமான தொடர்பு 6 மணித்தியாலங்களுக்கு மேல் இல்லை. பிறகு எனக்கு மகனிடம் இருந்து அழைப்பு வந்தது. "அம்மா பொலிஸார் என்னை விசாரணையிலிருந்து விடுவித்த பிறகு அறைக்கு வந்து பார்த்தேன், ஆனால் அங்கு எந்த தடயங்களும் இருக்கவில்லை. அண்ணாவுடைய ஒரு ஐ போன், ஒரு சாதாரண போன், கடவுச்சீட்டு, வேலை அடையாள அட்டை, பர்ஸ் (பணப்பை) எல்லாமே களவாடப்பட்டிருந்தது.
மேலும் இது ஒரு திட்டமிட்ட சதி அம்மா என்றார். தற்போது எனக்கு தெரிந்த வரையில் இவர் முதல் கடையில் வேலை செய்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்தியா - சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்கு செல்கின்றவராம்.
அவர் அங்கு சென்று இவருடன் பழகி தொலைபேசி மூலம் பேசும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக எனது மகனை அழைத்து தனது விடுதியில் தங்க வைத்துள்ளார்.
பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து இவரை வைத்து 20 இலட்சம் கடன் பெற்றுள்ளார்கள். பின்னர் இவரது சம்பள பணத்தையும் பெற்றுள்ளனர். எனக்கு திடீரென ஒருநாள் எனது மகன் அழைப்பு மேற்கொண்டு, அந்த பெண்ணுக்கு நிறையபேருடன் தொடர்பு உள்ளது. என்னை ஏமாற்றி விட்டாள் என அழுதார். இது எல்லாம் வேண்டாம் தம்பி, வேலையை செய்து விட்டு வா என நான் கூறினேன்.
தொலைபேசி அழைப்பு துண்டிப்பு
மகன் உயிரிழக்கும் போது அந்த பெண்ணும், பக்கத்து அறை ஆணும் தான் இவருக்கு பக்கத்தில் இருந்தார்களாம். நிறைய நேரம் எனது மகனுடன் சண்டையிட்டார்களாம். கடன் எடுத்த பின்னர் எனது மகனின் தொலைபேசியில் எனது தொலைபேசி இலக்கத்தை அந்த பெண் தடுத்து (block) பண்ணி விட்டார்.
கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இடையே தொடர்பு இல்லை. அன்று காலை எனது இளைய மகனுடன் சேர்ந்து படங்கள் எடுத்து விட்டு, இதை அம்மாக்கு அனுப்பு என்று கூறிவிட்டு சென்றாராம். இச் சம்பவம் நடப்பதற்கு முன்னர், வேலை முடிந்து அறைக்கு போகும் போது எனது இளைய மகன் கண்டாராம்.
அந்த பெண்ணை பொலிஸ் விசாரித்த வேளை தன்னைத்தானே அவர் குத்திக்கொண்டு தன்னை நோக்கி நடந்து வந்து விட்டு விழுந்து விட்டாராம் என்று கூறியதுடன் அவரது கடவுச்சீட்டு, தொலைபேசி, வேலை அடையாள அட்டை, பர்ஸ் என்பன அனைத்தும் எங்கே என்று தெரியாது என கூறினாராம்.
எனது மகனின் தொலைபேசியில் தடுக்கப்பட்டிருந்த (block) எனது இலக்கம் சம்பவம் நடந்த பின்னர் தடுப்பு எடுக்கப்பட்டது. பல தடவைகள் அழைத்தும் பதில் இல்லை. அதற்கு பின்னர் ஒரு தடவை எனது மகனின் தொலைபேசியில் அந்த பெண் பேசினார். அந்த பதிவும் என்னிடம் உள்ளது.
அந்த பெண் திட்டமிட்டு எனது மூத்த மகனின் தொலைபேசிகள், வேலை அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பர்ஸ் என்பவற்றை திருடிவிட்டு, எனது மற்றைய மகன் தான் திருடினார் என பொலிஸில் கூறினார்.
ஒப்புக்கொள்ளல் வாக்கு மூலம்
ஆகையால் எனது மகனுக்கு பின் பக்கமாக கையை வைத்து கைவிலங்கு போட்டுவிட்டு நெற்றியில் துப்பாக்கியை வைத்து அண்ணாவை நீயா கொலை செய்தாயா? அவரது ஆவணங்கள் எங்கே என மிரட்டினர். அதற்கு எனது மகன் "அண்ணாவை இழந்த சோகத்தில் நானே இருக்கிறேன். நான் அண்ணாவை கொலை செய்ததாக கூறுகின்றீர்கள். வேண்டுமானால் என்னையும் சுட்டுக் கொல்லுங்கள்" என்று கதறியுள்ளார்.
துபாய் பொலிஸார், இது தற்கொலை என முதல் கூறியுள்ளார்கள், பின்னர் இது ஒரு கொலை என கூறுகின்றனர். வைத்தியர்களுடைய அறிக்கை வந்த பின்னர் தான் எதுவும் கூறலாம் என கூறுகின்றனர். அந்த பெண் எனது இறந்த மகனின் தொலைபேசியில் எங்களுடன் பேசியதை பதிவு செய்து துபாயில் உள்ள எனது மற்றைய மகனுக்கு அனுப்பினேன்.
அவர் அதை துபாய் பொலிஸாருக்கு காட்டுவதற்கு சென்றவேளை அவர்கள் அவரை அதை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி அடித்துள்ளனர். காணாமல் போயுள்ளதாக கூறப்படும் எனது மகனின் தொலைபேசி அந்த பெண்ணிடம் இருப்பதால் அவர் அதில் உள்ள ஆதாரங்களை அழிக்கக் கூடும். அந்த கைப்பேசிக்கு நாங்கள் வாட்ஸ்அப் தகவல் போடும் போது அதனை அந்த பெண் பார்க்கிறார். ஆனால் பதில் எதுவும் போடுவதில்லை.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
தற்போது அங்கிருக்கும் எனது மற்றைய மகனுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். நான் இங்கு உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சில இடங்களுக்கு சென்று கடிதங்களை வழங்கி விட்டேன். ஆனால் பதில் எதுவுமில்லை.
எனவே உரிய தரப்பினர் எனது மகனின் சடலத்தை இங்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். அத்தோடு என்னுடைய மற்றைய மகனையும் பாதுகாப்பாகவும் நாட்டுக்கு அழைத்து வர வழி செய்ய வேண்டும்“ என கோரிக்கை விடுத்துள்ளார்.