ஷிவம் துபே படைத்த சாதனை: சிஎஸ்கே அணியின் எக்ஸ்தள பதிவு
இந்திய(India) அணியின் சகலத்துறை ஆட்டகாரர் ஷிவம் துபே(Shivam Dube), கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 டி20 சர்வதேச போட்டிகளில் (டி20ஐ) வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டிள்ளது.
அதில், துபே விளையாடினால், இந்தியா வெற்றி பெறும். 30-0 மற்றும் இன்னும் வலுவாகிக் கொண்டே செல்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
If Dube plays, India wins
— Chennai Super Kings (@ChennaiIPL) February 3, 2025
30-0 and still going strong 🥳💪🏻💥#WhistlePodu #INDvENG
📸 : BCCI pic.twitter.com/qMCCBxC0rb
ஷிவம் துபே
இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடிள்ள இந்திய அணி வீரர் ஷிவம் துபே 2019 நவம்பர் 3ஆம் திகதி டெல்லியில் பங்களாதேஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார்.
அவரது முதல் போட்டியில், பங்களாதேஸ் அணிக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அவரது 5ஆவது டி20 போட்டியில், திருவனந்தபுரத்தில் வங்கதேசத்திடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆனால், அதன் பிறகு, ஷிவம் துபே இடம்பெற்ற எந்த டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடையவில்லை.
2020 ஜனவரியில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெள்ளையடிப்பு செய்த இந்திய அணியில் ஷிவம் துபேவும் இடம் பெற்று இருந்தார். அந்த ஐந்து போட்டிகளிலும் அவர் விளையாடினார்.
2024இல் 15 டி20 போட்டிகளில் துபே விளையாடினார். இதில் டி20 உலகக் கோப்பையில் எட்டு போட்டிகள் அடங்கும். துபே இடம் பெற்ற அந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
26 முறை துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் அவர் ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 5ஆவது டி20 போட்டியில் துடுப்பாட்டத்தில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்துள்ளார்.
இந்தியாவிற்காக 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷிவம் துபே 26 முறை துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்.
நான்கு அரை சதங்கள் உட்பட மொத்தம் 531ஓட்டங்கள் குவித்துள்ள அவர், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள் எடுத்ததே இந்திய அணிக்கான அவரது சிறந்த புள்ளிகளாகும்.
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 24 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
2019ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நான்கு ஓவர்களில் 30 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |