ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிவசேனை கௌரவிப்பு
வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆடு மற்றும் மாடு என்பவற்றின் கடத்தலை முறியடித்தமைக்காக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிவசேனை அமைப்பு நேற்று (15.06.2024) கௌரவிப்பு வழங்கியுள்ளது.
வவுனியா, ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக தலைமையில் ஏ9 வீதியில் விசேட சோதனை ஒன்றை பொலிஸார் மேற்கொண்டனர்.
இதன்போது ஏ9 வீதியூடாக பயணித்த வாகனங்களை சோதனை செய்த போது இரு வாகனங்கள் நிறுத்தாது வீதியூடாக தப்பிச் சென்றுள்ளன.
வழிமறித்து சோதனை
விரட்டிச் சென்ற பொலிஸார் அவ்விரு வாகனங்களையும் வழிமறித்து சோதனை செய்ததில் வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக உரிய அனுமதிகளின்றி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வடக்கின் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மற்றைய வாகனம் வடக்கின் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 18 மாடுகளுடன் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு சட்டவிரோதமாக கொண்டு சென்ற போது அதனை தடுத்து நிறுத்தியமையை பாராட்டி சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவத்திரு அ.மாதவன், சு.வரதகுமார் உள்ளிட்ட அமைப்பின் பிரமுகர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |