நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்..! உடனடியாக நீதிமன்றத்தை நாடிய ஷிரந்தி..
சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் தான் கைது செய்யப்படலாம் என தெரிவித்து முன்பிணை மனுவொன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று(05.10.2026) இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடவுச்சீட்டு இரத்து
தற்போது, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்கு சென்றுள்ளதாக கூறப்படும் ஷிரந்தி ராஜபக்ச, உரிய காலத்தில் விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை எனில், இவ்வாறு அவரது கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படி பயணத் தடை விதிக்கப்பட்டால் அவர் நாட்டுக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே, இன்றையதினம் முன்பிணை கோரிய மனுவொன்றினை ஷிரந்தி ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்துள்ளது.

சிறிலிய என்ற பெயரில் வங்கிக் கணக்கொன்றைத் திறந்து, அதிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 24ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு முன்னதாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
இதனையடுத்து, தனது சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவுக்கு கடிதமொன்றை அனுப்பிய ஷிரந்தி ராஜபக்ச, தனக்கு 14 நாட்கள் சலுகைக் காலத்தை வழங்குமாறு கோரியிருந்தார்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள அந்த சலுகைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகாவிட்டால், அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க நிதிக் குற்றப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.