இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் இன்று அதிகாலை (16) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியாகும் ஊடகச்செய்திகள் பொய்யானவை என ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை
மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் ஒரு தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறவிருந்த நேரத்திலேயே குறித்த அறிவிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அதற்கு முன்பு ஷிரந்தி ராஜபக்ச FCID-யால் அழைக்கப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே சம்பந்தப்பட்ட கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
FCID-யின் முன்னைய அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை குடும்ப உறுப்பினர் மறுத்துள்ளார்.