காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இருவழி கப்பல் போக்குவரத்து சேவை
ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இருவழி கப்பல் போக்குவரதை ஆரம்பிக்க மத்திய கடல்சார் சபை திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய கடந்த 14.10.2023 அன்று, தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
இந்திய உயர்ஸ்தானிகரின் கள விஜயம்
இதன்படி மோடியின் அறிவிப்பை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இருவழி கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய கடல்சார் சபை திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையிலான அதிகாரிகள், தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று நேற்று முன்தினம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கோபால் பாக்லே,
“தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த துறைமுகங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் அதேநேரம் தலைமன்னார் - தனுஸ்கோடி இடையே தரைப்பாலம் அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது.
இவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும். குறிப்பாக தமிழக மக்களுக்கு பலன் அளிக்கும்” என்றார்.
கப்பல் போக்குவரத்து சேவை
முன்னதாக இந்தியாவின் தனுஸ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் சேவை 24.02.1914 அன்று ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி 22.12.1964-லூயிசியா புயலால் தனுஷகோடியின் பெரும் பகுதி அழிந்தது. இதன் பின்னர் 1965 ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 1981ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு மோதல் போராக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |