கடலில் மூழ்கும் கப்பல் - பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கையின் கடற்பரப்பு
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு - கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கடலில் தீ விபத்துக்குள்ளான எம். வீ. எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியினை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில், நேற்று ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடல்வள சுகாதார ஆராய்ச்சி அமைச்சருக்கு தெரிவித்ததை அடுத்தே இன்று காலை இப்பணிகள் ஆரம்பிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கப்பல் மூழ்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் பரவியிருந்த தீ பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், கப்பலின் சில பகுதிகள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலின் கப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் துணை பொறியியலாளர் ஆகிய மூவருக்கும் நாட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


