ஆட்சி மாற்றத்தால் ஐஎம்எப் உடனான திட்டம் தடம் புரண்டுவிடும் : செஹான் சேமசிங்க தெரிவிப்பு
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துள்ள திட்டம் தடம் புரண்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே பொருளாதார மாற்ற சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
" சர்வதேச சமூகம், குறிப்பாக மேற்கத்தேய நாடுகள், இலங்கைக்கு 4 ஆண்டு விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடனான ஏற்பாட்டை ஆதரித்து வருகின்றன.
அத்துடன் 2023 மார்ச் 20ஆம் திகதியன்று மொத்தம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியக் நிர்வாகக் குழுவால் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம்
எவ்வாறாயினும், எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகளான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவை எதிர்கால தேர்தலில் அதிகாரத்தை வென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் மாற்றுத்திட்டங்கள் குறித்து பேசவுள்ளதாக தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், ஆட்சி மாறினாலும் திட்டங்கள் மாறாத வகையில் புதிய சட்டமூலம் இந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இது ஒரு பொருளாதார மாற்றச் சட்டமாக இருக்கும், அத்துடன் இது திட்டத்தின் நிலைத்தன்மைக்கு சட்டபூர்வமான அந்தஸ்தை கொடுக்கும் அதேநேரம் ஆட்சியில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் பொதுச்சட்டமாக மாறும்” என சுட்டிகாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |