பெண் ஊடகவியலாளர் மீதான பாலியல் துன்புறுத்தல்: விசாரணைகள் ஆரம்பம்!
பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரச தொலைகாட்சியொன்றில் பணியாற்றும் அதிகாரிக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த விசாரணைகள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் உத்தரவின் பேரில் இடம்பெறுவதாக இன்றைய தினம் (01.05.2023) வௌயிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், உள்ளக மற்றும் அமைச்சரவை மட்டத்திலான விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு கிடைக்கவில்லை
மேலும், தான் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்ட பெண் ஊடகவியலாளர், சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளபோதிலும், அவர் உத்தியோகப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் எவற்றையும் பதிவு செய்யவில்லை. இருந்தபோதிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், ஊடக அமைச்சின் செயலாளருக்கோ அல்லது இலங்கை அரச தொலைகாட்சி நிர்வாகத்திற்கோ இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
எனினும், பெண் ஊடகவியலாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊடக அமைச்சின் செயலாளரையும் இலங்கை அரச தொலைகாட்சி நிர்வாகத்தையும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.




