ஒரே மாதத்தில் தோற்றத்தை மாற்றிய செவ்வந்தி.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாதாள உலக பின்னணி!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்திற்குள் இஷாரா செவ்வந்தி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட பின்னர், பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மதுகம சென்றுள்ளார்.
அங்கு மதுகமையை சேர்ந்தவரும் தற்போது வெளிநாட்டில் வசித்து வருபவருமான பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவர் ஒரு மாத காலம் வரை செவ்வந்தி தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
தனது பாதாள கும்பல் உறுப்பினர்களை பயன்படுத்தி அவர் இந்த உதவிகளை செவ்வந்திக்கு வழங்கியுள்ளார்.
தோற்றத்தில் மாற்றம்
குறித்த பாதாள உலகத் தலைவர், கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு மாத காலம் வரை மதுகமவில் தங்கிய செவ்வந்தி, தனது நீண்ட தலைமுடியை குறுகியதாக வெட்டி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இதன்போது, மதுகம பகுதியில் உள்ள பல இரகசிய இடங்களில் ஒளிந்து கொள்ள தேவையான வசதிகள் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இஷாரா செவ்வந்தி, மதுகமவில் பதுங்கியிருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அங்கு தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தடுப்புக் காவல்
அப்போது செவ்வந்தி மாத்தறைக்கு தப்பிச் சென்றிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
மாத்தறையில் சில நாட்களை கழித்த பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து நேபாளுக்கு சென்றுள்ளார்.
இவ்வாறிருக்க, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களும் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தடுப்புக் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி, ஜே.கே பாய், சுரேஷ் மற்றும் தக்சி ஆகியோரை கொழும்பு குற்றப்பிரிவு விசாரித்து வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



