சிறைக்குச் செல்வதை விட மேலான துயரத்தைச் சந்தித்துள்ள ரணிலும் ராஜபக்சர்களும்
ராஜபக்சர்களும், ரணில் விக்ரமசிங்க போன்றவர்களும் தாங்கள் சிறைக்குச் செல்வதை விட, இதுவரை காலமும் தாங்கள் தக்கவைத்திருந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிலையில் உள்ளனர் என்று எரிசக்தித் துறை அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தினால் நேற்றையதினம்(27.09.2026) கம்பஹாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டம் காணத் தொடங்கியுள்ள மேலாதிக்க மனநிலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று நாம் அடைந்திருக்கும் இந்த நிலை, அன்று நீங்கள் அளித்த வாக்குகளினாலேயே சாத்தியமானது.

நீண்டகாலமாக நிலவிவந்த முதலாளித்துவ தாராளவாத மேலாதிக்கம் இன்று சிதைந்து, அழிந்து போகத் தொடங்கியுள்ளது.
அந்த உயர்மட்ட வர்க்க மேலாதிக்கத்திற்கு தற்போதைய காலம் சவாலான ஒன்று. இந்த நிலையில், அதே மேலாதிக்க மனநிலையில் இருந்தவர்கள் பலரின் அடித்தளமே இன்று ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாகத்தான், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக பல்வேறு கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருவதுடன், எதிராக பல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

நிலபிரபுத்துவ உயர்வர்க்கத்தின் மனநிலையில் இருந்த, ராஜபக்சர்கள் போன்றவர்களும், தாராளவாத மேலாதிக்க உயர்வர்க்கத்தின் மனநிலையில் இருந்த ரணில் விக்ரமசிங்க போன்றவர்களும், தாங்கள் சிறைக்குச் செல்வதைவிட, தாங்கள் நீண்டகாலமாகத் தக்கவைத்திருந்த அந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையல் உள்ளனர்.
அவர்கள் கட்டியெழுப்பியிருந்த இந்த மேலாதிக்க நிலையின் அடித்தளத்தை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் ஆதரவோடு அடித்து நொறுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.