எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள்: சுகாதார உத்தியோகத்தரின் மனிதாபிமான செயல்(Video)
திருகோணமலை - ஐந்தாம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு சிற்றூண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் இரண்டு, மூன்று நாட்களாக நின்று வருகின்றனர்.
தேநீர் வழங்கி வைப்பு
இந்நிலையில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தமது சொந்த செலவில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்க வைத்துள்ளார்.
திருகோணமலை - கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் சதுரானி நிககொல்ல என்பவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் வரவேற்பு
நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற மக்கள் இரவு பகலாக தமக்கு முன்னாள் உள்ளவர்களையும், பின்னால் பயணிப்பவர்களையும் தவறவிடாது பயணித்து கொண்டு செல்கின்றனர்.
இதன்போது தேநீர் குடிப்பதற்கு கூட நேரம் இல்லாமையினால் வரிசையில் இருப்பவர்கள் பசியுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு குறித்த குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் செய்த சேவை அனைத்து இனமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இனிவரும் காலங்களில் அனைவரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன் வரவேண்டும் எனவும் இவ்வாறான சேவைகளை பாராட்ட வேண்டும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.