செர்பியாவில் நடந்த பெரும் போராட்டம்.. மாணவர்களின் கல்வித் தகுதி ரத்து
செர்பியாவின் நோவி பஸார் நகரில், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நோவி சாட் தொடருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அதற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராடி வந்தனர்.
கல்வித் தகுதி ரத்து
இந்த நிலையில், நேற்றைய தினம்(21/12/2025) பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில், பங்கேற்ற காரணத்திற்காக நோவி பஸார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 30 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், மாணவர்கள், பல்கலைக்கழக முகாமைத்துவ சபையின் பதவி விலகலையும், புதிய தேர்தலையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தலைமையிலான அரசு, கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளைச் செய்வதாகவும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை ஊக்குவிப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நோவி பஸார் நகரம் செர்பியாவின் இளமையான மக்கள் தொகையைக் கொண்ட பகுதி(60% பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்) என்பதும், இங்கு பொஸ்னிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.