பொரள்ளை தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
கொழும்பு - பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவன் ஒருவன் பயன்படுத்தப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த, சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுமார் 16 வருட காலமாக, குறித்த தேவாலயத்திற்கு வருகின்ற நபர் என்பதுடன், கடந்த 9 மாதங்களாக குறித்த தேவாலயத்திலேயே நிரந்தரமாக அவர் தங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கைக்குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும், பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைக்குண்டை வைத்ததாக கூறப்படும் 13 வயது சிறுவனை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
