ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழக்கு தொடர 30 பேரின் தகவல் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மனித கொலைகள் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 பேரினதும் தகவல்கள் அடங்கிய அறிக்கை கிடைத்ததும் சட்டமா அதிபர், அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பாரெனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேரே, ஜனாதிபதியின் செயலாளரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் நேற்று கேட்டபோதே அவர், குறித்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி - உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி, அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையை இம்மாதம் முதலாம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்திருந்தது.
இதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீதும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
