புலம்பெயர் உறவுகளிடம் செல்வம் எம்.பி. முன்வைத்த கோரிக்கை (Video)
புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் போராளிகளுக்கு உதவி செய்வதாக இருந்தால் போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுங்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது நேற்றையதினம் (09.07.2023) வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில், போரிலே பல உயிர்களைத் தியாகம் செய்த போராளிகளின் மதிப்பு, மரியாதை இழந்து நிற்கின்ற ஒரு தேசத்திலே சமூகங்கள் எங்களைப் புறக்கணிக்கின்ற நிலை தொடர்ந்து இருக்கின்றது.
தங்களை அர்ப்பணித்தவர்கள் எங்களுடைய சமூகத்தினாலே ஒதுக்கப்படுகின்ற அவலநிலை என்பது என்றுமே ஈடு செய்ய முடியாத துக்கமான நிலையாகத் தான் இருக்கும்.
போராளிகள் இன்றும் சொல்லொண்ணா துன்பத்தோடு வறுமையில் வாடுகின்ற நிலை காணப்படுகிறது. போராளிகள் மதிக்கப்பட வேண்டும்.
அவர்களை எங்களுடைய சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட புலனாய்வுத்துறை, இராணுவம், பொலிஸார் முப்படைகளும் தொடர்ந்து போராளிகளை விசாரணை செய்யப்படும் போது சமூகத்திடம் ஒரு அச்சம் வருகின்றது.
இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு தான் பார்க்கப்படுவார்களா?, எங்களுக்கும் அந்த ஆபத்து வருமா? என்றெல்லாம் நினைக்கின்ற அளவிற்கு இந்த புலனாய்வுத்துறை, முப்படைகளும் இப்போதும் போராளிகளை ஒதுக்க வைக்கின்ற திட்டமிட்ட செயலாகச் செய்து வருகின்றார்கள்.
பல அரசசார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் உருவாகிப் பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள். ஆனால் அவ் உதவிகள் முழுமையாகப் போராளிகளுக்குச் சென்றடைவதாக அறியவில்லை.
புலம்பெயர் உறவுகளிடம் ஊடகங்கள் ஊடாக ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக இருந்தால் போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுங்கள்.
ஏனென்றால் அவர்களுக்குத் தான் தெரியும் எங்கெங்கு போராளிகள் கஷ்டப்படுகிறார்கள், எங்கே அவர்கள் மோசமான நிலையில் உள்ளார்கள் என்பது இவர்கள் தான் அதனைக் காணக்கூடியதாக இருக்கும்.
போராளிகள் நலன்புரி சங்கம்
உலகத்திலே பல இடங்களிலே எங்களுடைய உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேசுவதெல்லாம் போராட்டம், போராளிகளைப் பற்றியே கதைக்கிறார்கள்.
அவர்கள் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு ரூபா போடுவார்களாக இருந்தால் போராளிகள் யாரிடமும் கையேந்தாத ஒரு சூழல் உருவாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும் மனதால் , உடலால் பாதிக்கப்பட்டு புனித நோக்கத்திற்காகச் சென்ற போராளிகள் இன்று மோசமாக கஷ்டப்படுகின்ற ஒரு நிலையைப் போக்க முடியும்.
எங்களுக்குக் கிடைக்கும் உதவிகள் அனைத்தும் இனி போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஊடாகவே செய்ய வேண்டும் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
வேதனையான விடயம்
தனியாக அழைத்துக் கொடுப்பதை விட அனைவரும் பயனடையக்கூடிய வகையில் இந்த சங்கம் செயற்படும் என்று நம்புகின்றோம்.
நிச்சயமாக உங்களுக்காகக் குரல் கொடுப்போம். நாமெல்லாம் ஆயுதம் ஏந்தியவர்கள், போராடியவர்கள் எங்களுக்கு முன்னாலே பல நண்பர்களை இழந்திருக்கின்றோம்.
அவர்களுடைய உடலைக் கொண்டு செல்ல முடியாது திண்டாடியிருக்கின்றோம். அவ்வாறு போராடியவர்கள் இன்று சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிலை மிகவும் வேதனையான விடயம் என மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
