தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் (Photos)
ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குச் சமீப காலமாகக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் மத்திய, மாநில உளவுத்துறை பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார், கடலோர காவல் படையினர் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக ராமேஸ்வரம் குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து நேற்று மாலை ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் மறைந்திருந்தனர்.
அப்போது தங்கச்சிமடம் பெட்டேல் நகரைச் சேர்ந்த பிரைட்வின் என்பவருக்குச் சொந்தமான கடற்தொழில் விசைப் படகில் கடற்தொழில் ஈடுபட செல்வது போல் கடற்தொழிலாளர் ஒருவர் கை பை ஒன்றைப் படகில் ஏற்றிக் கொண்டு இருந்தார்.
இதனை கண்ட குற்றப்பிரிவு பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் குறித்த பையில் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என அழைக்கப்படும் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து படகின் உரிமையாளர் பிரைட்வின் மற்றும் அக்காள்மடம் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த டெஸ்மன் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டி என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற ஐஸ் போதைப்பொருள் உண்மையானதா? என்பது குறித்து ராமநாதபுரத்தில் உள்ள தடவியல் பொலிஸார் ரசாயனம் மூலம் பரிசோதனை செய்து கிறிஸ்டல் மெத்தம் பீட்டபமைன் என்று உறுதிப்படுத்தினர்.
ராமேஸ்வரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 957 கிராம் ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடத்தல் போதைப்பொருள் பிடிபட்டதை அடுத்து
கடலோர பகுதிகளிலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் பாதுகாப்பைப்
பலப்படுத்தி உள்ளனர்.