இந்திய பிரதமரின் பாதுகாப்பு பாணியில் பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு
இலங்கை பொலிஸாரின் 84ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு வருகைதந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பாணியில் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை பொலிஸாரின் 84 ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டித் தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பிரதமரின் பாதுகாப்பு
இறுதி நிகழ்வில் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு பிரதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தமைக்கான காரணம் அவருக்குள்ள கொலை அச்சுறுத்தலா என்று தெரியவில்லை.
இந்திய பிரதமருக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் சாயலில் கருப்பு மூக்கு கண்ணாடிகள் அணிந்த கோட்- சூட் அணிந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் இரு பக்கமும் அவரை மறைத்தவாறும் வந்தனர்.
அதில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியும் கோட் அணிந்திருந்தார். குண்டு துளைக்காத BMW காரில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் வந்திறங்கிய பிரதமர் ஹரிணி நடந்து செல்லும் வழியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட ஒரு புகைப்படப் பிடிப்பாளரை மறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரியை அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.
எந்த பாதுகாப்பும் தேவையில்லை, அவற்றுக்கு பெரும் நிதி விரையமாக்கப்படுவதாக கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகளில் பல மாற்றங்கள் தென்படுகின்றன.



