கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக 20 மில்லியன் ஒதுக்கீடு: ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை (Photos)
அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக உடனடியாக 20 மில்லியன் ரூபாயை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவுக்கும் பைசல் காசிம்க்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையாகவே இந்த நிதி ஒதுக்கீடும் ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியின் செயலாளர் அவசர பணிப்புரை
கரையோர பாதுகாப்புத் திணைக்களம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் அவசர பணிப்புரைகளை விடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துறைமுக கப்பல் துறை அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவை சந்தித்த பைசல் காசிம், கடல் அரிப்பு சம்பந்தமான நீண்ட விளக்கம் ஒன்றை தெளிவாக வழங்கியுள்ளார்.
நிந்தவூர் பிரதேசத்தின் நிலைமையை அவரிடம் விளக்கியதையடுத்து, இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் ஆர்வமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 'ஜியோ பேக்'களை உடனடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்.
இதற்குரிய டொலரை பெற்று தருவதாக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க உறுதி அளித்துள்ளார். இதே நேரம், கடல் அரிப்பு தொடர்பாக நேரில் ஆராய்ந்து நிரந்தர தீர்வு காண்பதற்காக, உயர் மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அடுத்த வாரம் அனுப்புவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் நிந்தவூர் பிரதேசத்துக்குச் செல்லும் உயர்மட்ட குழு, நிரந்தர தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முதல் கட்ட செயல்பாடாகவே முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
முழுமையான ஆய்வொன்று நடத்தப்பட்டு நிந்தவூர் கரையோர பிரதேசங்களை பாதுகாப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, கரையோர பிரதேசங்களை பாதுகாப்பதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்களின் வரைபடங்களையும் பைசல் காசிம் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி அளித்தார் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
இதே நேரம், அவசர தடுப்பு நடவடிக்கையாக, ஒலுவில் துறைமுகத்தினுள் இருக்கின்ற கற்பாறைகளை விடுவித்து நிந்தவூர் பிரதேச கரையோரங்களுக்கு போடுமாறு துறைமுக அதிகார சபைக்கு துறைமுக அதிகார சபையின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைமுக அதிகார சபையின் தலைவர் கயான் அழுகவர்த்தயுடன், பைசல் காசிம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து உடனடி நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல சுற்று பேச்சு வார்த்தை
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கின்ற நிலையில், பைசல் காசிம் இது சார்ந்த அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களுடன் நேற்று பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.
இதன் மூலமே, முதல்கட்ட பணிகளாக இருபது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கின்ற கற்பாறைகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஜனாதிபதியின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபயவர்த்தனவை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடலரிப்பை தடுப்பதற்கான துரித பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வஜிர அபயவர்த்தன துறை சார் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதே வேளை, கரையோர பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவை சந்தித்ததோடு, கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினுடைய பணிப்பாளர் நாயகம் ரணவக்கவையும் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
