தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் இடைநீக்கம்
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை விளையாட்டு அமைச்சர் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளார்.
அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை இந்த இடைநீக்கம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கைக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெறிமுறைகள் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபை ஆகியவற்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது.
தவறான நடத்தை
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா உட்பட்ட சிலர், நெறிமுறை மீறல்கள் மற்றும் தவறான நடத்தைக்காக விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை தொடர்ந்து மீறி வருகிறார்கள் என்று குற்றம் சுமத்தியே இந்த தடை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இருந்து பணம் பெற்றிருந்தாலும், ரியோ ஒலிம்பிக்கின் போது பயணம் மற்றும் தங்குமிடத்திற்காக டி சில்வா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் தலா 10,000 டொலர்களை கோரியதாக இலங்கை அரச கண்க்காய்வு அலுவலகம் கண்டறிந்திருந்தது.
அத்துடன், விளையாட்டு அமைச்சின் தேவையான ஒப்புதல்களைத் தவிர்த்து, 2022 பேர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான இலங்கைக் குழுவில் ஆறு பேரை முறையற்ற முறையில் சேர்த்தமை போன்ற அங்கீகரிக்கப்படாத செயல்கள் தொடர்பிலும் சில்வா மீது சர்வதேச குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |