அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி சட்டம் கட்டாயமாக்கப்படுகிறது
வாகனங்களில் பயணிப்போருக்கான ஆசனப் பட்டி சட்டம் இந்த மாதம் 20ஆம் திகதி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபை இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாகும் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் முன்பக்கத்தில் பயணிப்பவர்கள் மட்டுமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதற்கமைய, வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் எவ்வித விதிவிலக்குமின்றி கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.