கிண்ணியாவில் கடல் கொந்தளிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
கிண்ணியாவில் தற்போது நிலவி வரும் கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடல் நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பதில் கடற்றொழிலாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடித்தொழில் முற்றாக ஸ்தம்பிதம்
தமது வாழ்வாதாரமான படகுகள் மற்றும் வலைகளை சேதமடையாமல் பாதுகாப்பதற்காக, கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து அவற்றை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி, பல இடங்களில் படகுகள் வீதியோரங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக நிலவி வந்த கனமழை மற்றும் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு காரணமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆற்று நீர் கடலில் கலப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொடர் காற்றினால் மீன்பிடித்தொழில் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மேலும் தொடர்ச்சியான இயற்கைச் சீற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




