மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள் : பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்றையதினம் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த(Susil Premjayantha) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட கல்வித் துறை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. சரியான நேரத்தில் பரீட்சைகளை நடத்தி பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை. பின்னர், பொருளாதார நெருக்கடி வலுவடைந்ததால், கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை சுமூகமாகியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் வழமை போல நடத்தப்படுகின்றன. அதறகாக சாதாரண தர பரீட்சையை டிசம்பரிலும், உயர்தர பரீட்சையை ஓகஸ்டிலும் நடத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் மாகாண அதிகாரிகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளோம்.
கலந்துரையாடலின் போதான யோசனைக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம். அதன்படி டிசம்பரில் நடக்க வேண்டியிருந்த சாதாரண தர பரீட்சை நாளையுடன் நிறைவுக்கு வருகிறது.
அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதோடு, உயர்தர பரீட்சைக்கான வகுப்புகளும் ஆரம்பமாகும். இந்த ஆண்டு 452,000 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்குத தோற்றினர். அவர்களில் 388,000 பேர் முதல், இரண்டாவது அமர்வுக்காக பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களாவர்.
அந்த மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் உயர்தர வகுப்புகளில் இணைய வாய்ப்பு கிடைக்கும். அதற்கு தேவையான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் 15 ஆம் திகதி வௌியிடப்படும். பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மே மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |