இன்று முதல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்
கோவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைவாக சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை கருத்தில் கொண்டு குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகளித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பல இடங்களில் மழையுடனான காலநிலைக்கு மத்தியிலும் பாடசாலை மாணவர்கள் உற்சாகத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்ததாகவும் தெரியவருகிறது.