தடை செய்யப்பட்டுள்ள சுழி பகுதியில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்
சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய பாடசாலை மாணவன் ஒருவர் மகாவலி ஆற்றில் குளிக்கச்சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய தெல்தெனிய பகுதியை சேர்ந்த நமந்த ஹிந்துநில் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு இன்று நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டார் மற்றும் நண்பர்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்லுகையில் நாவலப்பிட்டி பல்ஹந்த பகுதியில் மகாவலி ஆற்றில் குளிக்கச்சென்ற போதே மாணவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த ஆற்றுப்பகுதி பிரதேசம் பாதுகாப்பற்ற, நீராடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள சுழி பகுதியென்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் நாவலப்பிட்டி பொலிஸாரும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.